

உடுமலை: கொங்கு நாடு என்று அழைக்கப்படும் மேற்கு தமிழகத்துக்கு உரிய நாட்டுப்புற நிகழ்த்துக்கலை வடிவங்களில் ஒன்று உடுக்கையடி கதைப் பாடல். உடுக்கையடி கதைப் பாடலாக காத்தவராயன் கதை, கோவலன் கதை, மதுரைவீரன் கதை போன்ற கதைகள் பாடப்பட்டாலும் அவற்றுள் மிகவும் புகழ்பெற்று விளங்குவது அண்ணன்மார் சாமி கதை என்றழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை ஆகும். கதை சொல்லும்போது இடையிடையே பாடல்கள் பாடுவர். அதற்கேற்ப உடுக்கை அடிப்பர். உடுக்கை பிரதான இசைக்கருவியாக இடம் பெறுவதால் இக்கலை வடிவத்துக்கு உடுக்கையடி கதைப் பாடல் என பெயர் பெற்றது.
அழிந்துவரும் இக்கலைக்கு உயிரூட்டும் விதமாக உடுமலையைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சீதாராமன், கல்லூரி பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் உடுக்கையடி கதைப் பாடல் நிகழ்ச்சியை நடத்தி அசத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: உடுக்கையடி கதைப்பாடல் என்பது ஒரு கடினமான நிகழ்த்துக் கலை வடிவம். இதில், அந்த கலைஞரே கதை சொல்ல வேண்டும். பாட வேண்டும். பாட்டுக்கேற்ப உடுக்கை அடிக்க வேண்டும். அந்த உடுக்கையின் தாளத்துக்கேற்ப ஆட வேண்டும். இப்படி பல திறன்களை வெளிப்படுத்த வேண்டிய கலை வடிவம்.
சின்னத்திரை மற்றும் சமூக வலைதளங்களின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் மக்களை, இதுபோன்ற தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது மிகவும் சிரமம். எங்கள் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் ஆதரவு அளித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
குறிப்பாக பொன்னர் சங்கர் கதை நிகழ்த்தும்போது மக்களின் ஆதரவு இன்னும் அதிகரிக்கிறது. கிராமப்புறங்களில் இன்னும் இக்கலையை நடத்த மேடைகளோ ஒலிபெருக்கி வசதிகளோ கிடைப்பதில்லை. எனவே எங்களுக்கு தேவையான வசதிகளை நாங்களே ஏற்பாடு செய்து கொள்கிறோம்.
எங்களது குழுவில் 3 பேர் உள்ளோம். ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உடுக்கையடி கதைப்பாடல் நிகழ்வில் பொன்னர் சங்கர் கதைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
குறைந்தது முதல் 30 நாட்கள் வரை தொடர் நிகழ்ச்சியாக தினசரி இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடத்தியுள்ளோம். பெரியவர்கள் மட்டுமல்லாது, குழந்தைகள் கூட எங்களது நிகழ்ச்சியை பொறுமையாக அமர்ந்து பார்க்கின்றனர். இது, எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. இந்த உடுக்கையடி கதைப் பாடல் கலையை பரம்பரையாக நடத்தி வரும் கலைஞர்கள் உள்ளனர்.
ஆனால், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட போதுதான் இக்கலை எங்களுக்கு பரிச்சயமானது. எனவே இக்கலையைக் கற்றுக்கொண்டு நிகழ்ச்சிகள் நடத்த தொடங்கினோம். கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரசு நிகழ்ச்சிகள், அரசின் சாதனை விளக்கக் கூட்டங்கள், அரசு பொருட்காட்சி ஆகியவற்றில் இதுபோன்ற கலைகளுக்கு அனுமதியளித்து கலைகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிராமப்புற கலைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.