

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மணலூரில் சந்தனம், அத்தி மரங்களை வளர்த்து பசுமை மயானத்தை ஊராட்சித் தலைவர் உருவாக்கி உள்ளார்.
மதுரையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது மணலூர். தற்போது சிவகங்கை மாவட்டத்துக்குட்பட்ட இந்த ஊரில் ஏராளமான தொல் பொருட்கள் கண்டறியப்பட்டு பழமையான ஊராக அறியப்பட்டுள்ளது. இங்கு 4,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள மயானம் ஒரு ஏக்கரில் பராமரிப்பின்றி இருந்தது.
2020-ம் ஆண்டு இங்கு ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்ற அரசி முருகன், மயானத்தை சுத்தப்படுத்தி, பசுமையாக மாற்றி உள்ளார். மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டி, சந்தனம், அத்தி, நாவல், மா, தென்னை, புங்கை மரக்கன்றுகளை நட்டார். தற்போது அவை வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கின்றன.
மேலும் அங்கேயே மண்புழு உரம் தயாரித்தும், மரக்கன்றுகளை வளர்த்தும் விற்பனை செய்கின்றனர். இதன்மூலம் ஊராட்சிக்கும் வருவாய் கிடைக்கிறது. சுற்றுச்சுவரில் தலைவர்களின் தத்துவங்கள், வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. மயான வளாகத்துக்குள் சென்றுவர சாலை வசதியும் உள்ளது.
இது குறித்து அரசி முருகன் கூறியதாவது: இறந்த உறவினர்களை அடக்கம் செய்ய வருவோர் முகம் சுளிக்கக் கூடாது என்பதற்காக பசுமையாக மாற்றினோம். அண்மையில் ஓய்வு பெற்ற தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, பசுமை மயானங்களை ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.
நாங்கள் அதற்கு முன்பாகவே மயானத்தை பசுமையாக மாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் அங்கு காய்கறிகளை பயிரிட்டோம். மரங்கள் அடர்ந்து வளர்ந்ததால் தற்போது காய்கறிகளை பயிரிட முடியவில்லை. ஊடு பயிராக வாழை பயிரிட்டோம். மண் புழு உரத்தை ஊராட்சி சார்பில் வளர்க்கப்படும் மரங்கள், விற்பனைக்கான மரக்கன்றுகளுக்கு பயன்படுத்துகிறோம்.
மீதியை கிலோ ரூ.8-க்கு விற்பனை செய்கிறோம். மயான வளாகத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச ஆழ்துளை கிணறும் அமைத்தோம். வளாகத்தை பாதுகாக்க காவலாளியை நியமித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.