Published : 03 Jul 2023 04:10 AM
Last Updated : 03 Jul 2023 04:10 AM

கும்பகோணம் அருகே கீழப் பழையாறையில் புத்தர் சிலையின் தலை பகுதி கண்டெடுப்பு

கும்பகோணம் அருகே கீழப் பழையாறையில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையின் தலைப் பகுதி.

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள கீழப் பழையாறையில் புத்தர் சிலையின் தலைப் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் உதவிப் பதிவாளரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் பா.ஜம்புலிங்கம் கூறியதாவது: பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் புலவர் ச.செல்வசேகருடன் மேற்கொண்ட களப்பணியின் போது, பட்டீஸ்வரம் அருகே கீழப் பழையாறையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் 50 செ.மீ. உயரமுள்ள ஒரு புத்தர் சிலையின் தலைப் பகுதியைக் காண முடிந்தது.

இது கி.பி.10-11-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். சோழ நாட்டில் காணப்படுகின்ற புத்தர் சிலைகளின் கூறுகளான சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன்னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாக சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர், நெற்றியில் திலகக்குறி ஆகியவற்றுடன் இந்தச் சிலை உள்ளது. மூக்கும், காதுகளின் கீழ்ப்பகுதியும் சிதைந்துள்ளன.

இந்தச் சிலை உடற்பகுதியுடன், பழையாறையில் முன்பிருந்த புத்தர் கோயிலிலோ, விஹாரத்திலோ வழிபாட்டில் இருந்திருக்கலாம். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் 60-க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் உள்ளன.

அவற்றில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அருந்தவபுரம், கோபி நாதப்பெருமாள்கோயில், சோழன் மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. அருந்தவபுரம், கோபி நாதப்பெருமாள் கோவில், மணலூர் ஆகிய இடங்களில் தலையின்றியும், பெரண்டாக்கோட்டை, முழையூர், வையச்சேரி ஆகிய இடங்களில் தலைப்பகுதி மட்டும் உள்ளன.

பட்டீஸ்வரம், பெரண்டாக்கோட்டை, மானம்பாடி, விக்ரமம் ஆகிய இடங்களில் உள்ள சிலைகள் வழிபாட்டில் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பழையாறைப் பகுதியில் அதிகமான புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இப்பகுதியில் பவுத்தம் செழித்து இருந்ததை உணர்த்தும் சான்றுகளாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x