

மதுரை: தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட தனியார் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் உள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஒன்றில்கூட இந்த வசதியில்லை. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் யு.வெரோனிகா மேரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் மதுரை, சென்னை அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் வரும் செப்டம்பரில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் குழந்தையின்மை பிரச்சினையால் 2.75 கோடி தம்பதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.
குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் 6 தம்பதிகளில் ஒரு தம்பதியினர் குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்திலும் குழந்தையின்மையால் பாதிக்கப்படும் தம்பதியினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பிரச்சினையால் கணவன், மனைவி சேர்ந்து வாழ முடியாமல் விவாகரத்துகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை: கடன்பட்டாவது செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தம்பதியினர் தள்ளப்படுகின்றனர். இதை நன்கு புரிந்துவைத்துள்ள தனியார் மருத்துவமனைகள், இச்சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
2021 ஆண்டு நிலவரப்படி சென்னையில் 59, கோயம்புத்தூரில் 14, மதுரையில் 11 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 155 தனியார் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். ஆனால், மாநிலம் முழுவதும் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 38 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஒன்றில்கூட செயற்கை கருத்தரித்தல் மையம் இல்லை.
இந்நிலையில், மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான யு.வெரோனிகா மேரி, தமிழக அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் உள்ளதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதற்கு அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மூலம் எந்த அரசு மருத்துவமனையிலும் இந்த மையம் இல்லை என தெரிய வந்தது.
இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையத்தை தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் வரும் செப்டம்பரில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக யு.வெரோனிகா மேரி கூறியதாவது: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின், இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். அதே நேரம் 2 அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வசதியை ஏற்படுத்துவது போதுமானது அல்ல. செயற்கை கருத்தரித்தல் என்பது தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டிய சிகிச்சை முறையாகும்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை அல்லது மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றுதான் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். அவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்வதால் அலைக்கழிப்புக்கு ஆளாவதோடு, கூடுதல் செலவும் ஏற்படும்.
மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 2007-ம் ஆண்டே செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஆந்திரா, கேரளா மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு மருத்துவமனைகளில் இந்த வசதியை ஏற்படுத்திவிட்டன.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் சுகாதாரக் கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளதாகக் கூறப்படும் தமிழகத்தில், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு தற்போதுதான் 2 அரசு மருத்துவமனைகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. தனியார் மருத்துவமனைகள் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதிகளை தொடங்குவதற்கு அரசு சுகாதாரத் துறையின் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்திடம் தான் அனுமதி பெற வேண்டும்.
இதுவரை 150-க்கும் மேற்பட்ட தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ள அரசு சுகாதாரத் துறை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதியை ஏற்படுத்துவதில் மெத்தனம் காட்டுவது ஏன்? தனியார் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு மறைமுகமாக அரசு துணை போகிறதா? என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.