

சிங்கத்தை நேருக்கு நேர் பார்த்தால் பதறாமல் இருக்க முடியுமா? - இந்தக் கேள்விக்கு முடியும் என்று கெத்து காட்டி நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஒரு கால்நடை விவசாயி. இது ஏதோ வெளிநாட்டுச் சம்பவம் இல்லை. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் கிர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இங்குதான் உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்ளுக்கான தேசியப் பூங்கா இருக்கிறது. இந்நிலையில், சிங்கம் ஒன்று பசுமாட்டை இரையாக்க முயற்சிக்க, அதனை அதன் உரிமையாளர் தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் வைரலாகியுள்ளது. நடந்த சாகசத்தை விவேக் கோடாடியா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், வனத்தை ஒட்டிய சாலையில் மேய்ச்சலுக்கு திரிந்த பசுமாட்டை பெண் சிங்கம் ஒன்று தாக்குகிறது. பசுமாட்டின் கழுத்தில் லாவகமாக இறுகப் பிடித்துக் கொண்ட அந்தச் சிங்கம் விடாமல் பசுமாட்டை இழுக்க முயற்சிக்கிறது. அப்போது தூரத்தில் சற்றும் சலனமில்லாமல் நடந்துவந்த பசுமாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து வந்த கால்நடை விவசாயி அந்தச் சிங்கத்தை நோக்கி பயமின்றி முன்னேறுகிறார். அதற்குள் சிங்கம் பசு மாட்டை நடுச் சாலையில் இருந்து ஓரத்துக்கு இழுத்து வந்துவிட்டது.
அப்போது, திடீரென ஒரு செங்கலை எடுத்த விவசாயி, செங்கலுடன் சிங்கத்தை நோக்கி கைகளை ஓங்க, சிங்கம் பிடியை தளர்த்துவிட்டு வனத்துக்குள் ஓடுகிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அந்த விவசாயிக்கு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.