Last Updated : 28 Jun, 2023 10:01 PM

Published : 28 Jun 2023 10:01 PM
Last Updated : 28 Jun 2023 10:01 PM

சிகரம் தொட்ட சிங்கப் பெண் முத்தமிழ்ச்செல்வி

விருதுநகர்: ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண்ணாக முத்தமிழ்செல்வி விளங்குகிறார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த நாராயணன்-மூர்த்தியம்மாளின் புதல்வி முத்தமிழ்செல்வி (33). கடலூரில் படித்து முடித்து, திருமணமாகி தற்போது சென்னையில் கணவர் மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும், ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வரும் முத்தமிழ்செல்வி, கடந்த 7.3.2021 அன்று மகளிர் தினத்தையொட்டி, திருப்பெரும்புதூர் அருகேயுள்ள 155 அடி உயர மலை உச்சியிலிருந்து கண்களை கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு 58 விநாடிகளில் கீழே இறங்கி தனது முதல் சாதனையை பதிவு செய்தார்.

பின்னர், 23.12.2021 அன்று இமாச்சல பிரதேசத்தின் குலாங் கிராமத்தின் மலை உச்சியிலிருந்து மூத்த மகள் தக்சாவுடன் (12), இளைய மகள் வித்திஷாவை (9) முதுகில் கட்டிக்கொண்டு, மூவரும் கறுப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டும் 165 அடி உயரத்தை 55 விநாடிகளில் இறங்கி, தனது 2-வது சாதனையை படைத்தார்.

தொடர்ந்து, கடந்த 26.1.2022 குடியரசு தினத்தன்று சென்னை வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் குதிரை மீது அமர்ந்து இலக்கில் துல்லியமாக 1,389 அம்புகள் எய்து 3-வது சாதனை படைத்தார். இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது 4-வது சாதனையை நிகழ்த்த திட்டமிட்டார்.

இதற்கு முன்னோட்டமாக, லடாக் பகுதியில் உள்ள சுமார் 5,500 அடி உயரம் கொண்ட பனிமலை உச்சியை அடைந்து முத்தமிழ்செல்வி சாதித்தார். அதன்பின்னர், கடந்த மே மாதம் எவரெஸ்ட் பயணத்தை தொடங்கினார். அதையும் வெற்றிகரமாக முடித்து, எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இது குறித்து முத்தமிழ்செல்வி கூறியதாவது: கடந்த மே 5-ம் தேதி எவரெஸ்ட் ஏறத் தொடங்கினேன். ஆனால், நான் நினைத்ததை விட, இப்பயணம் மிகக் கடினமாக இருந்தது. கடுங்குளிரை சமாளித்து, உணவு, தூக்கத்தை பல நாட்கள் தியாகம் செய்து பயணித்தோம். அத்துடன், மன உறுதியோடு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில், அடுத்ததாக ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாது.

குறிப்பிட்ட தொலைவுக்குப் பின் வாழ்வா சாவா என்ற நிலையில்தான் பயணம் இருந்தது. சில சமயம் உயிர் பயமும் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சற்று கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தி என்னை அமைதிப்படுத்திக் கொள்வேன். தொடர்ந்து பயணித்து, கடந்த மே 23-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளேன். இந்த நேரத்தில் எனது பயணத்துக்கு உதவிய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, விளையாட்டுத் துறை உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி உள்ளிட்டோரை நினைவுகூர விரும்புகிறேன் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x