

சென்னை: சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி, புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் சிறுகதைகளை வைத்து இயக்கியுள்ள ‘சின்னஞ்சிறு கதைகள் பேசுவோம்’ என்னும் கதைகூறல் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கத்தில் ஜூலை8 (சனிக்கிழமை) மாலை 4:30-க்கு அரங்கேற்றப்பட உள்ளது.
அதேபோல, சென்னையை சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் மாயா சர்மா ஸ்ரீராமின் சிறுகதைகளின் அடிப்படையில் ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கியுள்ள ‘ஸ்பீக்கிங் ஸ்டோரீஸ்’ (Speaking stories) நிகழ்ச்சி அதே இடத்தில் ஜூலை 9 (ஞாயிறு) மாலை 7:30க்கு அரங்கேற்றப்பட உள்ளது. சென்னை ஆர்ட் தியேட்டர் வழங்கும் இந்த நிகழ்ச்சிகள் 70 நிமிடங்கள் கால அளவு கொண்டவை.
இதுகுறித்து ப்ரஸன்னா ராமஸ்வாமி கூறியபோது, ‘‘கதைகளை வாசிப்பதற்கும், நாடகமாக நிகழ்த்துவதற்கும் இடைப்பட்ட வடிவம் இது. பொதுவாக, கதைகளை நாடகமாக்கும்போது நாடகம் எனும் வடிவத்துக்கே கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். ஆனால், இதில் கதையின் எழுதப்பட்ட வடிவத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கில இலக்கியங்களின் செழுமையை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியாகவே இதைஉருவாக்கியுள்ளோம். இது தொடக்க நிகழ்ச்சி. இதேபோல தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துக் கொண்டு கதைகூறல் நிகழ்ச்சிகளை அரங்கேற்ற உள்ளோம்’’ என்றார்.
நாடக உலகில் 40 ஆண்டுகளாகஇயங்கிவரும் ப்ரஸன்னா ராமஸ்வாமி, கடந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்தின் 4 சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு இதே‘மேடை’ அரங்கில் நாடகமாக அரங்கேற்றினார். 1997-ல் இந்திய சுதந்திரபொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னை நாரதகான சபாவில் ‘நானும் எனது எழுத்தும்’ எனும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
சுந்தர ராமசாமி. அசோகமித்திரன், சா.கந்தசாமி, பிரபஞ்சன் உள்ளிட்ட30 எழுத்தாளர்கள் அதில் பங்கேற்று தமது எழுத்துகள் குறித்து வாசகர்களுடன் உரையாடினர். அதன் தொடர்ச்சிதான் இந்த கதைகூறல் நிகழ்ச்சி என்கிறார் ப்ரஸன்னா.
இதற்கான அனுமதிச் சீட்டுகளை‘புக்மை ஷோ’ (https://in.bookmyshow.com/plays/chinnanchiru-kathaigal-peasuvom/ET00362273) இணையதளத்தில் ரூ.150-க்குபெற்றுக்கொள்ளலாம்.