’அனிமி என் வாழ்க்கையை மாற்றியது!’ - இந்தக் கூற்றுக்குப் பின்னால்..?

’அனிமி என் வாழ்க்கையை மாற்றியது!’ - இந்தக் கூற்றுக்குப் பின்னால்..?
Updated on
2 min read

ஜப்பானில் பிரபலமான மேற்கோள் ஒன்று இருக்கிறது... “மனிதர்களுக்கு மூன்று முகங்கள் உள்ளன. முதல் முகம் உலகுக்கு காண்பிக்க, மற்றொரு முகம் தனது நண்பர்கள், குடும்பத்தினரிடம் காண்பிக்க. மூன்றாவது யாரிடமும் காட்ட விருப்பப்படாத முகம். அதுவே உங்கள் உண்மையான பிரதிபலிப்பு.”

நீங்கள் யாருக்கும் காட்ட விரும்பாத இந்த முகங்கள்தான் நமது இருப்பை தீர்மானிக்கின்றன. அதனை உணர்த்தும் ஊடகமாக அனிமி (ஒரு வகை கார்ட்டூன்) கதாபாத்திரங்கள் கடந்த சில தசாப்தங்களாகவே வெளிப்படுகின்றன.

ஒரு சமூகம் உயிரோட்டமாக இருக்க அச்சமூகம் சார்ந்த கலைகளும் புத்துணர்வு பெற வேண்டும். இல்லையேல், அங்கு உருவாகும் ஒவ்வொரு சிந்தனைகளும், குரல்களும் மழுக்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இறுதியில் அது இறந்த சமூகமாக மாறுகிறது. அவ்வாறு இருக்கையில், வாழ்வதற்கான அர்த்தப்பாடான ’தம்மை வெளிப்படுத்துதலை’ இந்த அனிமி கதாபாத்திரங்கள் ஒரு வகையில் ஊக்கப்படுத்துகின்றன. இக்கதாப்பாத்திரங்கள் வெறும் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல. அவை வாழ்வின் ரகசியங்கள் பலவற்றை தங்களுக்குள் பொதிந்து வைக்கின்றன.

இப்படியான ஓர் முன்னுரையைதான் ஜப்பானின் அனிமிகளுக்கு பலரும் வழங்குகின்றனர். ஏனெனில், ஜப்பானின் அனிமி கதைக் தளங்களும், அதில் இடம்பெறும் பாத்திரங்களும் மனித வாழ்வியலை போதிக்கின்றன. அனிமிகள் வாழ்வுக்கான அர்த்தத்தை அளிக்கின்றன என்பதே அனிமி பற்றிய இளைய சமூகத்தின் வெளிப்படாக இருக்கிறது.

”அனிமி என் வாழ்க்கையை மாற்றியது, நான் யார் என்பதை மறைக்கவோ அல்லது நடிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது. முக்கியமாக, நான் நானாக இருக்க அவமானம் கொள்ள வேண்டாம் என்பதை அனிமி கற்றுக் கொடுத்தது” என்கிறார் ஜப்பானின் இசையா மியாசகி

இசையா மட்டுமல்ல தனிமையின் பிடியிலும், உளவியல் சிக்கல்களிலும் உலாவிக் கொண்டிருக்கும் ஜப்பான் இளைஞர்கள், அதிலிருந்து மீள அனிமிகள் எதோ ஒருவகையில் வழிகாட்டுகின்றன.

ஜப்பானின் நருடோ கதாபாத்திரம், நாம் வாழ்க்கையில் துவண்டுவிட கூடாது. மீண்டு எழ வேண்டும். நீங்கள் இலக்கை நோக்கி ஓடினால் நீச்சயம் அதனை அடைவீர்கள் போன்ற தத்துவங்களை உணர்த்துகிறது. Monster, Kaguya, Fate/stay night, Mob Psycho 100, Death Note போன்ற அனிமி தொடர்கள் திரைப்படங்கள் கூட தயங்கும் மனித உளவியலை அழுத்தமாக பேசுகின்றன.

காதலை இதுவரை உலக நாடுகள் கண்டிராத பல கோணங்களில் அனிமி தொடர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. Monthly Girls’ Nozaki-kun, Hyouka, Wotakoi போன்ற தொடர்கள் மூலம் காதலை அடுத்த தளத்துக்கு எடுத்து சென்றதில் அனிமிகளுக்கு முக்கியப் பங்குண்டு. அத்துடன் குடும்ப உறவுகளை எவ்வாறு கையாள்வது என்பதில் தொடங்கி சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை அனிமிகள் பேசுகின்றன.

ஜப்பானின் வரலாறு என்பது வன்முறைகளால் நிறைந்தது. அந்நாடு புரிந்த போர்க் குற்றங்களும், அங்கு நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களும் ஜப்பானியர்களை உளவியல் ரீதியாக பல ஆண்டுகள் பாதிப்பை ஏற்படுத்தின. இம்மாதிரியான நெருக்கடிகளை கடந்து சமூகமாக அம்மக்கள் ஓர் எழுச்சியை அடைவதற்கு அனிமிக்கள் பங்காற்றி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in