பெண்ணின் சிகிச்சைக்காக கால்பந்து போட்டி - கோத்தகிரி கிராம மக்கள் நெகிழ்ச்சி!

பெண்ணின் சிகிச்சைக்காக கால்பந்து போட்டி - கோத்தகிரி கிராம மக்கள் நெகிழ்ச்சி!
Updated on
1 min read

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடக்கோடு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அஸ்வினி. திருமணமான இவருக்கு, சமீபத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முயற்சி செய்துவரும் நிலையில், பண நெருக்கடியால் அவரின் குடும்பம் தவித்து வந்திருக்கிறது. இதையறிந்த கிராம மக்கள், பல்வேறு வழிகளில் சிகிச்சைக்கான நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கடைக்கம்பட்டி பாரதி இளைஞர் மன்றம் மூலமாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகளை நடத்தி, அதன் மூலமாக கிடைக்கும் நிதியை அஸ்வினியின் சிகிச்சைக்கு அளிக்க முடிவு செய்து, கடந்த வாரம் கால்பந்து போட்டிகளை தொடங்கினர்.

ஒரு வாரமாகக் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றுவந்த நிலையில், கட்டபெட்டு, உயிலட்டி ஆகிய அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. ஆட்ட நேரத்தில் யாரும் கோல் அடிக்காததால், டைபிரேக்கர் முறையில் கட்டபெட்டு அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. ஊர் காரியதசி ரமேஷ் வரவேற்றார் எட்டூர் தலைவர் ஹாலகவுடர் தலைமைவகித்தார். 19 ஊர் தலைவர் ராமாகவுடர், கம்பட்டி நாட்டாமை கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக காவிலேரை பீமன், ஹில் போர்ட் தாளாளர் ரவிக்குமார், நீலகிரி மாவட்ட கால்பந்து கழக துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஜே.பி.அஷ்ரப் அலி, ராம்சந்த் வியாபாரிகள் சங்கத் தலைவர் லியாகத் அலி, கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் சில்லபாபு மற்றும் கிராம தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கால்பந்து போட்டிகள் மூலமாக திரட்டப்பட்ட ரூ.4 லட்சம் நிதியை, அஸ்வினியின் சிகிச்சைக்கான உதவித் தொகையாக அளித்தனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, "இளம்பெண்ணின் சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பணமின்றி அவரின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். அவருடைய இந்த நிலை, எங்களை சோகத்தில் ஆழ்த்தியது‌. அவருக்கு எப்படியாவது உதவ நினைத்தோம். அதனால்சுற்றியுள்ள ஊர் தலைவர்கள் கலந்தாலோசித்து கால்பந்து போட்டிகள் மூலமாக நிதி திரட்ட முடிவு செய்தோம்.

மொத்தம் 16 போட்டிகளை நடத்தினோம்.பார்வையாளர்கள், கிராம மக்கள்என பலர் ரூ.4 லட்சம் வாரி வழங்கினார்கள். இந்த தொகையை அஸ்வினியின் சிகிச்சைக்கான தொகையாக அளித்துள்ளோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in