

திருப்புவனம்: தமிழகத்தில் பராமரிப்பின்றி உள்ள மயானங்களை சீரமைத்து பசுமை மயானங்களாக மாற்ற வேண்டுமென தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், இந்த பசுமை மயானங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது சொந்த செலவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உருவாக்கி உள்ளார்.
திருப்புவனம் பேரூராட்சியில் புதூர், நெல்முடிக்கரை ஆகிய 2 இடங்களில் தலா 2 ஏக்கரில் மயானங்கள் உள்ளன. அவை இரண்டும் பராமரிப்பின்றி இருந்தன. 2011-ம் ஆண்டு சேங்கைமாறன் தனது மனைவி வசந்தி பேரூராட்சித் தலைவராக இருந்தபோது 2 மயானங்களையும் தனது சொந்த செலவில் சீரமைத்தார்.
இந்த மயானங்களில் தலா 100 தென்னை கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா ஆகிய மரக்கன்றுகளை நட்டார். அவற்றைப் பராமரிக்க ஆழ்துளை கிணறு அமைத்ததோடு காவலாளிகளையும் நியமித்தார். சில ஆண்டுகளில் இருந்தே மரங்கள் பலன் கொடுத்து வருகின்றன. இதன்மூலம் கிடைக்கும் வருவாய் பேரூராட்சி நிர்வாகத்துக்கு செல்கிறது. சமூக விரோதிகளை மயானத்துக்குள் வருவதை தடுக்க தற்போது தலா 6 சிசிடிவி கேமராக்களை பொருத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இந்த மயானங்கள் பசுமை சோலையாக காட்சி அளிப்பதால் அவ்வழியாக வெளியூர் செல்வோர்கூட மயானம் என்றும் பாராமல் அமர்ந்து இளைப்பாறிச் செல்கின்றனர்.
இதுகுறித்து சேங்கைமாறன் கூறியதாவது: எங்கள் ஊரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வருவோர், சிரமப்படுவதை தடுக்கவே மயானங்களை பூங்காக்களாக மாற்றினேன். தற்போது இங்கே வருவோர் பசுந்தோட்டத்துக்குள் வருவதுபோல் எண்ணுகின்றனர். இது எனக்குப் பெரும் ஆத்ம திருப்தியை அளிக்கிறது.
உடலைப் புதைக்கும் இடத்தில் ஒரு வாழை மரம் நடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். மேலும் நெல்முடிக்கரை மயானத்தில் அரசு சார்பில் ரூ.1.80 கோடியில் நவீன தகனமேடை அமைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.