எங்க ஊரு காவல்காரன்... மதுரை கிராமப் பகுதியில் ஸ்பெஷல் ஏற்பாடு!

எங்க ஊரு காவல்காரன்... மதுரை கிராமப் பகுதியில் ஸ்பெஷல் ஏற்பாடு!
Updated on
2 min read

மதுரை: மக்கள் தொகைப் பெருக்கத்தாலும், குறைந்த எண்ணிக்கையிலான போலீஸாரும் பணியில் இருப்பதால் முன்புபோல் அனைத்துப் பகுதிகளுக்கும் போலீஸார் இரவு ரோந்து செல்ல முடியவில்லை.

இந்தச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி மதுரை நகர் பகுதியை ஓட்டிய கிராமங்களில் தற்போது கொள்ளையர்கள் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், வெளிச்சத்துக்கு வருவது வழக்குப்பதிவு செய்யப்படும் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே. வராத கொள்ளை, திருட்டு சம்பவங்கள் ஏராளம். அதனால், மக்கள் தங்களை தாங்களே காக்க வேண்டிய கட்டாயமும், விழிப்புணர்வும் ஏற்படுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் காவல்நிலையங்களும், காவலர்களும் அதிகம் இல்லாத நிலையில் ஊரையும், மக்களையும் காக்க காவல்காரர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமுறை தலைமுறையாக இப்பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த முறை வழக்கொழிந்து போனது.

தமிழக நகர்ப் புறங்களில் நேபாளத்தைச் சேர்ந்த ‘கூர்கா’-க்கள் இரவு காவல் பணியில் ஈடுபடுகின்றனர். காவல் துறையினரின் ரோந்து பணியோடு இந்த கூர்காக்களும் இரவு ஊர்க்காவலில் ஈடுபடுவதால் ஓரளவு நகர்புறங்களில் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. ஆனால், நகர் புறங்களை ஒட்டிய விரிவாக்கப் பகுதி கிராமங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மதுரை புதுவிளாங்குடி அருகேயுள்ள கோவில் பாப்பாக்குடி பகுதியில் போலீஸார் இரவு ரோந்து வராததால் அடிக்கடி கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்தன. இதையடுத்து ஊரைக் காக்க அந்த ஊர் மக்களே களம் இறங்கியுள்ளனர். ஷிப்ட் முறையில் இரவில் ஊரின் எல்லையில் ஒரு குழுவும், ஊருக்குள் மற்றொரு குழுவும் கையில் கம்பு, டார்ச் லைட்டுகளுடன் வலம் வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

கோவில்பாப்பாகுடியைச் சேர்ந்த ராஜன் கூறியதாவது: எங்கள் ஊர் வளர்ந்து வரும் நகராக மாறி வருகிறது. சமீபகாலமாக நகர்ப்புறத்தில் உள்ளோர் இப்பகுதியில் புதிதாக வீடுகள் கட்டி அதிக அளவில் குடி பெயர்கின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்கள் நடந்தன.

ஜூன் 10-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் குரங்கு குல்லா அணிந்தவர்கள், உடல் முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்டு அரை டவுசருடன் சத்யா நகர் 5-வது தெருவில் வசிக்கும் ஒரு வீட்டுக்குள் புகுந்து ஆயுதங்களை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். அதற்குப் பிறகும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை.

ஊரை ஓட்டிய கண்மாய் கரையில் புதர்கள் மண்டி இருப்பதால் கொள்ளையர்கள் ஒளிந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக உள்ளது. இரவில் மக்கள் அயர்ந்து தூங்குகின்ற வேளையில் கொள்ளையர்கள் கண்மாய் கரை வழியாக ஊருக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் தூக்கத்தை இழந்து தவித்தனர்.

இதையடுத்து ஊரில் 10 இளைஞர்கள், பெரியவர்களைக் கொண்ட குழு அமைத்துள்ளோம். ஷிப்ட் முறையில் தினமும் நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை காவல் பணியில் ஈடுபடுகிறோம். இந்த ஊர்க்காவல் பணியால் தற்போது மக்கள் நிம்மதி யடைந்துள்ளனர். மர்ம நபர்கள் நட மாட்டமும் குறைந்துள்ளது.

எங்கள் கிராமத்தில் அடிக்கடி இரவில் மின்தடை ஏற்படுவதால் கொள்ளை யர்களுக்கு இது சாதகமாகிவிடுகிறது. மின் தடை ஏற்படாதவாறு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியமும், பாதுகாப்பு வழங்க காவல் துறையினரும் முன்வரும் வரை இதுபோல் நாங்களே எங்களைப் பாதுகாத்துக் கொள்ள இரவு காவல் பணியில் ஈடுபட முடி வெடுத்துள்ளோம், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in