Last Updated : 23 Jun, 2023 09:54 PM

 

Published : 23 Jun 2023 09:54 PM
Last Updated : 23 Jun 2023 09:54 PM

“எங்களுக்கு அரசு மறுவாழ்வு அளிக்க வேண்டும்” - சென்னை ரிக்‌ஷா ஓட்டுநரின் துயரக் குரல்

ரிக்‌ஷா ஓட்டுநர் சங்கர்

சென்னையில் இன்று மிக அரிதாகவே காணப்படும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள், நாற்பது - ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எளிய மக்கள் அதிகளவு பயன்படுத்திய போக்குவரத்து சாதனம். தற்போது சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே ரிக்‌ஷாக்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக பிராட்வே, சவுகார்பேட்டை, வால் டாக்ஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலவீனமான தோற்றமுடைய முதியவர்கள் பலரும் பழுதடைந்த ரிஷாக்களில் வாடிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு போவதைக் காண முடிகிறது.

அநேகமாக சென்னையில் சைக்கிள் ரிக்‌ஷாவைப் பார்த்த,பயணித்த கடைசி தலைமுறை நாமாகக்கூட இருக்கலாம். ஏனெனில், நவீன போக்குவரத்து வசதிகள் அதிகம் வந்த பின் நமது பயணங்கள் எளிதாகிவிட்டதால் இன்று ரிக்‌ஷாக்களின் பயன்பாடு முற்றிலுமாக குறைந்துவிட்டது.

சென்னையின் வட இந்திய மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஒன்று சவுகார்பேட்டை. அங்கு ரிக்‌ஷாவையே நம்பி வாழ்வாதாரத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் பெரியவர் சங்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தனது வாழ்கை பயணம் குறித்து பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். 40 வருடங்களாக இங்கு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டிக் கொண்டிருக்கிறேன். மனைவி, மூன்று பிள்ளைகள் என எல்லோரும் இருந்தும் இன்று தனியாகத்தான் இருக்கிறேன். எனக்கென்று இப்போது யாரும் இல்லை. என் உடலில் சில பிரச்சினைகள் உள்ளது மற்றவர்களைப் போல என்னால் சாதாரணமாக நடக்கவும் மற்ற வேலைகள் செய்யவும் முடியாது. ஒரு விபத்தில் கை, கால் முறிந்து பாதி ஊனமாகிவிட்டேன். பதினைந்து வருடங்களாக தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன்.

இந்த ரிக்‌ஷா தான் என் வீடு. இது வாடகை ரிக்‌ஷாதான். அந்த நாட்களில் ரிக்‌ஷாவின் தினசரி வாடகை வெறும் ஐந்து ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் வாடகை செலுத்தி வருகிறேன்.

1971-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம் ரிக்‌ஷா ஓட்டுநர்களைப் பெருமைப்படுத்தியதோடு பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தின் மூலம் எங்களுக்கு என்று ஓர் அடையாளம் கிடைத்ததை போல் உணர்ந்தோம். இன்றும் நீங்கள் காணும் ரிக்‌ஷா ஓட்டிகள் பலர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள்தான்.

ஆரம்பத்தில் சென்னையில் கை ரிக்‌ஷாக்களே அதிகம் ஓடியது. கை ரிக்‌ஷா என்றால் பயணிகளை ஏற்றிக்கொண்டு, ரிக்‌ஷாக்காரரே அதை கைகளால் இழுத்துச் செல்வார்கள். 1973-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் மனிதனை மனிதனே இழுக்கின்ற நிகழ்வு கொடுமையானது என்று அதை ஒழிக்கும் வகையில் கைரிக்‌ஷாக்கள் தடை செய்யப்பட்டன.

கை ரிக்‌ஷா உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதுடன் அவர்களுக்கு விலையில்லா சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன. எங்களுக்கு அப்போது உரிமம் (லைசென்ஸ்) கொடுக்கப்பட்டது. எந்த தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக ஓட்டிக்கொண்டு இருந்தோம். இந்த ரிக்‌ஷாக்களை நம்பித்தான் என்னை போன்ற பலரது வாழ்க்கையே ஓடியது.

ஆனால், காலப்போக்கில் ரிக்‌ஷாக்களின் தேவை இல்லாமலே போய்விட்டது. ரிக்‌ஷா தொழிலை நம்பி வாழ்ந்த தொழிலாளிகள் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள். ஆனால் சிலர் வேறு போக்கிடம் இல்லாமல் இன்றும் ரிக்‌ஷாவை வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நானும் இந்த ரிக்‌ஷாவை வைத்துதான் பிழைத்துக் கொண்டிருக்கிறேன்.

காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை ரிக்‌ஷா ஓட்டுகிறேன். இப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் குறைவாகவே வருகிறார்கள் பலர் ஆட்டோ, கால் டாக்சியை நாடுகிறார்கள். முன்பெல்லாம் நானூறு, ஐந்நூறு ரூபாய் ஒரு நாளைக்கு நான் சம்பாதித்து இருக்கிறேன். ஆனால், இன்று ஒருநாள் முழுவதும் வண்டி ஓட்டினால் நூறு, நூற்றி ஐம்பது ரூபாய்தான் அதிகபட்சம் வருகிறது. அதிலும் வாடகைக்கு மட்டும் ஐம்பது ரூபாய் போய் விடும்.

எங்களுக்கு என்று ஓட்டுநர் உரிமம் கூட இப்போது இல்லை. பல முறை பதிவு செய்து பார்த்தும், இன்று வரை கிடைக்கவில்லை. நாங்கள் வைத்திருந்த பழைய உரிமம் எல்லாம் மழைக்காலங்களிலும் மற்ற பேரிடர் காலத்திலும் பாழாகிவிட்டது. நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.

அரசு எங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்து தர வேண்டும். மேலும், எங்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி மறுவாழ்வு அளிக்க வேண்டும். நான் ஒருவேளை சோற்றுக்கே யாசகம் எடுக்காத குறையாக ஒவ்வொரு நாளும் போராடுகிறேன். இந்த ரிக்‌ஷாவும் இல்லை என்றால் எனது வாழ்வு என்னவாகும் என்றே தெரியவில்லை” என்று தழுதழுத்தக் குரலுடன் விடை பெற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x