வாசிப்பை மறந்த தலைமுறையால் கோவையில் ‘மூடுவிழா’ காணும் ‘தியாகு புக் சென்டர்’ நூலகம்!

தனக்கு தேவையான புத்தகங்களை நூலகத்திலிருந்து தேடி எடுத்த வாசகி.
தனக்கு தேவையான புத்தகங்களை நூலகத்திலிருந்து தேடி எடுத்த வாசகி.
Updated on
2 min read

கோவை: எப்போதுமே லாப, நஷ்டங்களைப் பார்க்காத சிலரின் அக்கறைகளே சமூகத்துக்கு மேன்மையான விஷயங்களைச் சாத்தியப் படுத்துகின்றன. அப்படி, கடந்த 1980-ம் ஆண்டு முதல் கோவை ஆர்.எஸ்.புரம், கேப்டன் பழனிசாமி லே அவுட் பகுதியில் ‘தியாகு புக் சென்டர்’ என்ற பெயரில் தனியார் நூலகம், புத்தக விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு கட்டணம் செலுத்தி உறுப்பினர் ஆகிவிட்டால், புத்தக மதிப்பில் 10 சதவீதத்தை வாடகையாக செலுத்தி, புத்தகங்களை மாற்றி, மாற்றி பெற்றுக்கொள்ளலாம். எல்லா தரப்பு வாசகர்களின் ரசனை அறிந்து நூல்களை அளித்ததால், கோவை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் நூலகத்துக்கான வாசகர்கள் பெருகினர்.

80 ஆயிரம் நூல்கள்: சனிக்கிழமைதோறும் இங்கு நடைபெற்ற சங்கமத்தில் வாசகர்கள் சந்திப்பு நடைபெற்று வந்தது. பிரபல எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் இங்கு வருகை புரிந்துள்ளனர். அரிதான நூல்கள், ஆய்வு கட்டுரைகள், வரலாறு, புனைவு கதைகள், ஆங்கில நாவல்கள் என சுமார் 80 ஆயிரம் நூல்களுடன் இயங்கிவந்த இந்த நூலகத்துக்கு, தினமும் 20 முதல் 25 வாசகர்களின் வருகை இருந்து வந்தது. கரோனாவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கையானது 2 அல்லது 3 பேர் என சுருங்கிப்போனது.

இந்நிலையில், ஜூன் 30-ம் தேதியுடன் நூலகம் மூடப்படுவதாக அண்மையில் அறிவிப்பை வெளியிட்டார் அதன் உரிமையாளர் தியாகராஜன். அதோடு, நூல்களை 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பதாகவும் அறிவித்தார். கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகப்படியான வாசகர்கள் இங்கு வந்து புத்தகங்களை அள்ளிச்செல்கின்றனர். ஒரு பள்ளிக்கு, குழந்தைகள் சார்ந்த 15 ஆயிரம் புத்தகங்களை அப்படியே வாங்கியுள்ளனர். இப்படியான வாசகர்களிடம் தங்களது நூலக புத்தகங்கள் சென்று சேருவது மகிழ்ச்சி அளிப்பதாகவே உள்ளது என்கிறார், தியாகராஜன்.

நூலகத்தை மூடும் நிலைக்கான காரணங்கள் குறித்து அவர் கூறும்போது, “எங்களிடம் 5 ஆயிரம் வாசகர்கள் தொடர்ந்து உறுப்பினர்களாகத்தான் இருந்து வந்தனர். புதிய புத்தகங்கள் வந்துள்ளது என அவர்களிடம் தெரிவித்தால், ‘சார், அப்புறம் வரேன் சார்’. ‘இப்போ படிக்க நேரம் இல்லை’ என்பதே பெரும்பாலானோரின் பதிலாக உள்ளது. எதையோ நோக்கி அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 2 தலைமுறைகளாக குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை பெற்றோர் ஊட்டவே இல்லை.

மாணவர்கள் மதிப்பெண் பெற்றால் போதும் என்பதே, ஆசிரியர்களின் மனநிலையாகவும் உள்ளது. கூடவே, தொழில்நுட்ப வளர்ச்சியும் வாசிப்பு பழக்கத்தை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், தற்போதுள்ள இடத்தின் வாடகையும் இரு மடங்காக உயர்ந்ததால், அதை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக சொந்த சேமிப்பில் இருந்துதான் வாடகை செலுத்தி வருகிறேன். நூலகத்தை தொடர்ந்து நடத்த வாடகை இல்லாத இடம் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தேன். ஆட்கள் வந்து பார்த்துவிட்டு, ‘நல்ல கலெக்ஷன் வைத்துள்ளீர்கள்’ என்று சான்றளித்துவிட்டு போனார்களே தவிர, மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை” என்றார், வேதனையுடன்.

யாராச்சும் படிக்காமயா போயிருவாங்க..: நூலகத்தால் தாங்கள் பெற்ற அனுபவங்களை இப்போது நினைவுகூர்ந்து வருகின்றனர் வாசகர்கள். அவர்களில் சிலர் கூறும்போது, “யாராவது ஒருவர் புதிய நூல் ஒன்று வெளியாகியிருப்பது குறித்து வந்து சொன்னால், அடுத்த சில நாட்களில் அது தியாகுவின் கடையில் கிடைக்கும். நல்ல ஒரு புத்தகத்துக்கு நிறைய வாசகர்கள் உண்டு என்றால், கூடுதல் பிரதிகளை ஏற்பாடு செய்வார். தியாகுவுக்கு, தான் வாங்கி வைத்திருக்கும் சில நூல்களுக்கு ஒரு வாசகர்கூட இல்லை என்பது தெரியும். புத்தம் புதிதாக அது அப்படியே ‘ரேக்’கில் இருக்கும். ஆனாலும், அதைத் தெரிந்துதான் வாங்கியிருப்பார். ‘இருக்கட்டுமே, யாராச்சும் படிக்காமயா போயிருவாங்க’ என்று சிரிப்பார்”என்றனர், நெகிழ்ச்சியுடன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in