

பெரும்பாலும் கல்லூரியில் நண்பர்கள் குழுவாக சேர்ந்து இருப்பவர்களின் எண்ணம், செயல் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் படிக்கும் ‘ஃபைவ் ஸ்டார்’ குரூப்பில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். “எதிர்கால லட்சியம் என்ன?” என்ற கேள்வியோடு அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் தங்கள் சுயபுராணத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.
பவித்ரா
இந்தக் காலத்தில் பெண்கள் பைக் ஓட்டுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. அதையும் தாண்டி பைக் ரேஸ் செல்லும் அளவுக்கு தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். ‘பைக் ரேஸர்’ எனக் கல்லூரியில் செல்லமாக அழைக்கப்படும் பவித்ரா இந்த ரகம்தான். கடந்த 2 ஆண்டுகளாக பைக் ஓட்டக் கற்றுக்கொண்ட பவித்ரா, இப்போது பைக் ரேஸராகவும் உருவெடுத்திருக்கிறார். ஒளிப்படங்கள் எடுப்பதிலும் அலாதி ஆர்வமுள்ளவர். தன் நண்பர்களோடு சேர்ந்து திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் ஒளிப்படங்கள் எடுத்து தனக்குத் தேவையான பாக்கெட் மணியைச் சம்பாதித்துக்கொள்கிறார். தற்போது சினிமா உதவி இயக்குநராக புது அவதாரமும் எடுத்திருக்கிறார்.
“எனக்கு சின்ன வயசிலிருந்தே பைக் மேல ரொம்ப இஷ்டம். அந்தக் கனவுதான் நான் இன்னைக்கு பைக் ரேஸ் போகக் காரணம். ஆரம்பத்தில், கல்லூரியில் படிக்கிற வேலைய மட்டும் பாருன்னு எங்க வீட்டில் திட்டினாங்க. போட்டோகிராபி கத்துக்கிட்டு, அதுல சம்பாதிக்கும் பணத்தை என் செலவுக்கு எடுத்துகொள்கிறேன். என் செலவை நானே பார்க்கத் தொடங்கியதும், வீட்லேர்ந்து கொஞ்சம் சப்போர்ட் கிடைச்சுது. இப்போ எனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் பைக் ரேஸர் பவித்ரா.
அர்ஷத் & அரவிந்த்
கல்லூரியில் படித்துக்கொண்டே போட்டோ ஸ்டுடியோ ஆரம்பித்து அசத்தி வருகின்றனர் அர்ஷத், அரவிந்த் என்று இரு இளைஞர்கள். படிப்பு, ஸ்டூடியோ என இவர்கள் இரட்டைச் சவாரி செய்து வருகிறார்கள். எப்போது கேமராவும் கையுமாகத் திரியும் இவர்கள், இப்போது குறும்படங்கள் எடுப்பதிலும் பிஸி. படித்த முடித்த பிறகு தமிழ் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்கிற நினைப்பில், இப்போதே அதற்காகத் தீயாய் வேலை செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஒரே சமயத்தில் இத்தனை விஷயங்களில் ஈடுபாடு காட்டுவது ஏன் என்று கேட்டால், “எல்லாம் கேமரா மீதுள்ள காதலே காரணம்” என்று பளிச்சென சிரிக்கிறார்கள்.
சஞ்சனா & விஜய்
இவர்கள் இப்படி என்றால், இந்த நண்பர்களின் நட்பு வட்டத்திலுள்ள சஞ்சனா வேறு ரகம். “படிப்பைத் தாண்டி, நடனமே வாழ்க்கை” என்று தத்துவம் பேசுகிறார். பரதநாட்டியத்தில் முழு ஈடுபாடு கொள்ள சஞ்சனாவுக்கு ஊன்றுகோலாக இருந்தது நண்பர்களின் ஊக்குவிப்புதான் காரணம். இந்த ஃபைவ் ஸ்டார் குரூப்பில் தொழிலதிபர் ரேஞ்சுக்கு நினைப்பது விஜய் மட்டும்தான். நிகழ்ச்சி தொகுப்பாளராக வேண்டும் என்பது இவரது ஆசை. நிகழ்ச்சி தொகுப்பாளரானால் போதுமா என்று கேட்டால், “அதைவிட பெரிய ஆசை, லட்சியம் சொந்தமாக ஒரு சேனல் ஆரம்பிக்க வேண்டும். நாலு பேருக்கு வேலை தர வேண்டும்” என்கிறார் விஜய்.
படங்கள்: கனிமொழி