

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலத்தானக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தியில் அப்பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், சோனைமுத்து ஆகியோர் அளித்த தகவல் அடிப்படையில் வாமனச் சின்னம் பொறித்த நிலத் தானக்கல்லை சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா கண்டறிந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''மாவலி சக்கரவர்த்தி கர்வம் அடக்க மூன்றடி உயரத்தில் திருமால் வாமன அவதாரம் எடுத்தார். அந்த அவதாரத்தில் கையில் குடை, கெண்டி எனும் நீர்ச்செம்பு வைத்திருந்தார். அதனடிப்படையில் நிலதானம் கல்வெட்டுகளில் வாமன அவதாரத்தையும், குடை, கெண்டி போன்றவற்றையும் பொறிப்பது வழக்கமாக இருந்தது. அதேபோல் திருப்பாச்சேத்தி பகுதியில் பாண்டியர் காலத்தில் நிலக்கொடை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது கண்டறியப்பட்ட வாமனச் சின்னம் பொறித்த நிலத் தானக்கல், திருப்பாச்சேத்தி, சம்பராயனேந்தல் இடையே கண்டறியப்பட்டது. இதில் வாமன சின்னமும், குடை, கெண்டி மற்றும் செண்டு பொறிக்கப்பட்டிருந்தது. செண்டு என்பது மன்னர்களின் கையில் இருக்கும். இதன்மூலம் அப்பகுதியில் ஆட்சி செய்த மன்னன் நிலக்கொடை அளித்திருப்பதை அறிய முடிகிறது. இக்கல்லை தற்போது திருப்பாச்சேத்தி மக்கள் எல்லை பிடாரியாக வழிபட்டு வருகின்றனர்'' என்று அவர் கூறினார்.