Published : 21 Jun 2023 07:19 PM
Last Updated : 21 Jun 2023 07:19 PM

இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணிக்கும் வடமாநில தம்பதிக்கு மதுரையில் காந்தி அருங்காட்சியத்தில் வரவேற்பு

உலக அமைதிக்காக சைக்கிளில் இந்தியா முழுவதும் பயணம் செய்யும் வடமாநில தம்பதியினருக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில தம்பதியினருக்கு இன்று காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் பாரதி யுவகேந்திரா சார்பில் வரவேற்பு அளித்தனர்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரோகித். அவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இந்நிலையில், தம்பதியினர் உலக அமைதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் புறப்பட்டனர். தனித்தனி சைக்கிள் மூலம் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் சென்று பின்னர் கோவைக்கு வந்தனர். கோவையிலிருந்து , திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி சென்று விட்டு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் சென்றனர். அங்கிருந்து புறப்பட்டு இன்று மதியம் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு வந்தனர்.

அவர்களுக்கு பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியக பொறுப்பாளர் நந்தாராவ் உள்ளிட்டோர் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்களுக்க மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இதுகுறித்து காதல் தம்பதி ரோகித்-அஞ்சலி கூறுகையில், "உலக அமைதிக்காகவும், இந்திய மக்களிடையே நல்லுணர்வை ஏற்படுத்தவும், மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சைக்கிளில் செல்ல திட்டமிட்டுள்ளோம். மேலும், எங்களது பயணத்தை லடாக்கில் நிறைவு செய்யவுள்ளோம். ராமேசுவரம், தனுஷ்கோடி வரை சென்று விட்டு மீண்டும் மதுரை வந்துள்ளோம். இங்கிருந்து தென்காசி வழியாக கேரளா சென்று அங்கிருந்து மீண்டும் தமிழகம் வந்து தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் செல்ல உள்ளோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x