Published : 21 Jun 2023 08:43 PM
Last Updated : 21 Jun 2023 08:43 PM

40 கி.மீ வேகம் தாண்டக் கூடாது... எந்த அளவுக்கு சாத்தியம்? - சென்னை வாகன ஓட்டிகளின் கருத்து

சென்னையில் பகலில் 40 கி.மீ., இரவில் 50 கி.மீ. வேகத்தை தாண்டி ஓட்டினால், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க 10 இடங்களில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். இது குறித்து வாகன ஓட்டிகள் கலவையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

“சென்னையில் தற்போது வாகனங்களின் வேகம் பகலில் 40 கி.மீட்டர் (காலை 7 முதல் 10 மணி), இரவு 50 கி.மீட்டருமாக (இரவு 10 முதல் காலை 7 மணி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதத் தொகை செலான் அனுப்பி வைக்கப்படும். 30 சாலை சந்திப்புகளில் ஸ்பீடு ரேடார் கன் கருவியை பொருத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பாரிமுனை சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, புல்லா அவென்யு, ஈஞ்சம்பாக்கம் உள்பட 10 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சாலை சந்திப்புகளில் விரைவில் பொருத்தப்படும். சிக்னல்களை நவீனப்படுத்த அரசு ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளது. அதில் முதல் கட்டமாக 68 சிக்னல்களை நவீனப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது” என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். இது குறித்து சென்னை வாகன ஓட்டிகளின் கருத்துகள்:

தமிழன்: “நான் தனியார் நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்து வருகிறேன். என்னை பொறுத்தவரை 40 கிலோ மீட்டருக்கு மேல் செல்லக் கூடாது என்ற அறிவிப்பை பின்பற்றுவது மிகவும் கடினம். வண்டிகள் இல்லாத சாலைகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதே கடினம். நான் ஒருநாளைக்கு 13-லிருந்து 14 மணி நேரம் வேலை செய்தால்தான் 25 ஆர்டர் பார்க்க முடியும். ஆனால், 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் இந்த 25 ஆர்டர் பார்ப்பது எனக்கு மிகவும் கடினம். என்னளவில் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லை.”

விமல்: ”நமது சென்னை சாலைகளில் 40 கிலோ மீட்டர் செல்வது என்பது கடினம். சில சாலைகள் வாகனம் குறைவாக செல்லும். அந்த சாலைகளில் வேகமாகதான் செல்ல விரும்புவார்கள். ராப்பீடோ பைக் ஓட்டும் நான் பயணிகளின் அவசரத்துக்கு வேகமாக சொன்னால், அதை நான் பின்பற்றிதானே ஆக வேண்டும். சில நேரங்களில் யாரும் இல்லாத சாலையில் நானே 50 கிலோ மீட்டர் மேல் செல்வேன். ஆகவே, இதுபோன்ற சிரமங்கள் நமக்கு இருக்கிறது.”

ராமகிருஷ்ணன்: “நான் ஒரு மருத்துவ நிறுவனத்தில் சேல்ஸ் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன். 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு சரியான ஒன்றுதான். பகல் நேரத்தில் 40 கிலோமீட்டர் இரவு நேரத்தில் 50 கிலோ மீட்டர் என்று அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பால் விபத்துகள் குறையும் என்று நம்புகிறேன். இப்போது இருக்கும் இளைஞர்கள் அவசரமாக செல்ல வேண்டும் என்று வண்டிகளில் வேகமாக செல்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செல்வதால் மற்றவருக்கும் இடையூறு ஏற்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் 40 கிலோ மீட்டர் வேகம் என்பது பொதுவான வேகம். இந்த வேகத்தில் சென்றாலே சரியான நேரத்துக்கு சென்றடையலாம். மிகவும் சரியான அறிவுப்பு.

சசிகுமார்: “40 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் செல்ல வேண்டும் என்று கூறியிருப்பது எனக்கு சாத்தியமில்லாதது என்றே கருதுகிறேன். நான் விற்பனைப் பிரிவில் இருக்கிறேன் காலை முதல் இரவு வரை சுற்றிக்கொண்டே இருப்பேன். திருவெற்றியூரில் இருந்து வருவதால் தினமும் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வருவேன். ஆனால் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் குறித்த நேரத்துக்குள் என்னால் பணிக்கு செல்ல முடியாது. அதனால் என் அலுவலகத்தில் கேள்விகள் எழுப்பப்படும். தாமதமாக வந்தால் சம்பளத்திலும் சிக்கல்கள் வரும். எனக்கு மட்டுமல்ல, இந்த அறிவிப்பு பலருக்கும் சிக்கலாக இருக்கும்.”

ஜியாபாஸ்: “நான் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறேன். இந்த அறிவிப்பு பாதுகாப்பானதுதான். ஆனால் வேகமாக செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் 40 கிமீ வேகத்தில் செல்ல இயலாது.எனக்கு நிச்சயம் இது சிரமமாக இருக்கும்.”

சுராஜ்: “நான் உணவு டெலிவரி செய்கிறேன் எனக்கு என் வாடிக்கையாளர்தான் முக்கியம். அதனால் 40 கிலோ மீட்டர் சென்றால் நான் எப்படி குறித்த நேரத்தில் உணவு டெலிவரி செய்ய முடியும்.”

டோம்னிக் பிரகாஷ்: “இந்த அறிவிப்பு மக்களுக்கு பொருந்தாத ஒன்று. 50 கிலோ மீட்டர் சொன்னால் கூட நன்றாக இருக்கும். அப்போதுதான் வண்டி மைலேஜ் தரும். நான் ரியல் எஸ்டேட் வேலை பார்த்து வருகிறேன். சென்னையில் அனைத்து இடத்திற்கும் சுற்றுவேன். இந்த அறிவிப்பின்படி பார்த்தால் இனி முன்புபோல் வண்டியில் செல்லமுடியாத சூழல்தான் இருக்கிறது.”

ராஜா: ”நான் 20 வருடமாக ஆட்டோ ஓட்டுகிறேன். மயிலாப்பூரில் இருந்து சென்னையின் அனைத்து இடத்திற்கும் செல்வேன். 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு நல்ல அறிவிப்புதான்.”

ஒரு சில பயணிகள் வேகமாகப் போக சொல்வார்கள் சிலர் பொறுமையாக போக சொல்வார்கள் அவர்களுக்காக வேகமாக போக முடியாது எப்போதும் ஒரே வேகத்தில் செல்வதுதான் நல்லது. என்னை பொறுத்தவரையில் இந்த அறிவிப்பு மக்களுக்கான சரியான அறிவிப்பு.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x