

சென்னை: ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி தேசிய செல்ஃபி தினம் அனுசரிக்கப்படுகிறது. டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வில் செல்ஃபி படங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த நாளை கொண்டாடும் விதமாக சமூக வலைதள பயனர்கள் செல்ஃபி படங்களை எடுத்து, அதனை #SelfieDay எனப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இணைந்துள்ளது. இதற்காக பிரத்யேக செல்ஃபி ஒன்றை சென்னை அணி பகிர்ந்துள்ளது. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி செல்ஃபி எடுக்கிறார். அதில் சாம்பியன் பட்டம் சென்னை அணி வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர் உட்பட அனைவரும் புன்னகை பொங்க போஸ் கொடுக்கின்றனர். இந்தப் படத்தை போட்டோ எடிட்டிங் மூலம் சென்னை அணி சித்தரித்துள்ளது. இதனை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2023 சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் மொத்தமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக சிஎஸ்கே திகழ்கிறது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியும் 5 முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் பட்டம் வென்றுள்ளது.
கடைசி இரண்டு பந்துகளில் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா, 10 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். போட்டி முடிந்ததும் அவரை கேப்டன் தோனி தூக்கி சுமந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.