Last Updated : 18 Jun, 2023 03:57 PM

 

Published : 18 Jun 2023 03:57 PM
Last Updated : 18 Jun 2023 03:57 PM

2K கிட்ஸ் அப்பாக்களுக்கான சவால்கள்! - மனநல மருத்துவர் ராமானுஜம் நேர்காணல் | Father's Day Special

அப்பா பிள்ளைகளின் உறவை அத்தனை எளிதாக வார்த்தைகளால் விவரிப்பது கடினம். பத்து மாதங்கள் தாய்பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் இருந்து ஆயுள் வரை தாங்கிடும் ஓர் உயிர் அப்பா மட்டும் தான். எல்லா குழந்தைகளுக்கும் அப்பாக்கள்தான் முதலில் நிஜ ஹீரோவாக தெரிகிறார்கள். அப்படி இருக்கும் அப்பா பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவில் இப்போது உளவியல் ரீதியாக உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்த புரிதலை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் மன நல மருத்துவர் ராமானுஜம்.

> இந்தத் தலைமுறையில் அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு எப்படி இருக்கிறது; இரு தரப்பினரும் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் என்னென்ன?

முந்தையத் தலைமுறையில் அப்பாக்கள் வீட்டில் கண்டிப்பான ஒரு ஆளுமையாக இருந்தார்கள். அப்பா விட்டிற்குள் வந்தாலே வீடே அமைதி ஆகிவிடும் அந்த அளவுக்கு அவர் மேல் பிள்ளைகளுக்கு பயம் இருக்கும். இதை நிஜத்தில் மட்டும் இல்லாமல் திரைப்படங்களிலும், நாவல்கள், கதைகளில் வரும் தந்தை கதாப்பாத்திரங்களிலும் காணமுடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை 2K கிட்ஸ் அப்பாக்கள் கண்டிப்பானவர்களாக இல்லாமல் பாசக்கார அப்பாவாகத் தான் இருக்கிறார்கள்.

தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் உளவியல் ரீதியான சிக்கல்தான் சமூகத்தில் எதிர்காலத்தில் நிகழும் பல விஷயங்களுக்கு காரனமாக அமையும்.

> 80, 90-களின் அப்பா - பிள்ளைகள் உறவுடன் ஒப்பிடும்போது, 2K கிட்ஸ்களுக்கும் அப்பாக்களுக்குமான அணுகுமுறைகளில் நிலவும் பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் என்னென்ன?

80,90-களில் இருந்த அப்பாக்களை ஒப்பிடும்போது இப்போது உள்ள 2கே கிட்ஸ் அப்பாக்கள் மிகவும் வேறுபட்டு இருக்கிறார்கள். அப்பாக்கள் கண்டிப்பானவர்களாக இல்லாமல் நண்பர்களைப் போல்ப் பிள்ளைகளிடம் பழகி வருகிறார்கள். எந்த தயக்கமும் இல்லாமல் அப்பாவிடம் பிள்ளைகளால் பேசமுடிகிறது. ஆனால் அதுவே பல சமயங்களில் பெரும் பிரச்சினைக்குக் காரணமாகவும் அமைகிறது. அப்பாக்கள் எல்லா நேரங்களிலும் நண்பனாகவே இருக்க முடியாது சில சூழ்நிலைகளில் பிள்ளைகளின் நலனுக்காக கண்டிப்புடன் இருப்பது அவசியம். அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது உள்ள பிள்ளைகளால் கண்டிப்பைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை அவர்கள் மனதளவில் உடைந்ததுப் போய் விடுகிறார்கள்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன நலத்துறை இணை பேராசிரியர் டாக்டர் ஜி ராமானுஜம்

> தற்போதைய சூழலில் அப்பா - பிள்ளைகள் உறவில் பொருளாதார நிலைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னென்ன? இதை எவ்வாறு அணுக வேண்டும்?

அந்த காலத்தில் அப்பாவிடம் தனக்குத் தேவையானதைக் கேட்கக் கூட பிள்ளைகள் நடுங்கினார்கள். ஒருவேளை அப்பாவினால் கேட்டதை வாங்கித் தர முடியவில்லை என்றால் கெஞ்சிப் போராடி பிறகு வாங்குவார்கள். ஆனால் இப்போது பிள்ளைகள் கேட்ட உடனே அவர்களுக்குத் தேவையானதை வாங்கி தரும் அப்பாவாகத் தான் பலர் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சில சமயம் அவர்கள் கேட்டதை வாங்கித் தர முடியவில்லை என்றால் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவம் பிள்ளைகளிடம் இல்லை.

இப்போதய சமூக சூழ்நிலையில் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது. பொருளாதார நிலையை மீறி ஆசைப்படுவது தான் குழந்தைகளிடம் இப்போது உள்ளப் பிரச்சினை. தான் கேட்டது கிடைக்கவில்லை என்றால் எதிர்மறை எண்ணங்களால் சிலர் தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். உதாரணத்திற்கு ஐ போன் வாங்கி கொடுக்கவில்லை என்று அப்பாவிடம் சண்டை போட்டு தவறான முடிவு எடுத்தவர்களைப் பார்த்துள்ளேன்.

> அப்பாக்கள் தங்களுடைய கனவுகளை பிள்ளைகளின் மீது திணிப்பது இப்போது குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? - இந்த விஷயத்தில் அப்பாக்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

முந்தைய தலைமுறையை விட இப்போது பரவாயில்லை. ஒரு காலத்தில் அப்பா என்ன படிக்க வேண்டும் என விரும்புகிறாரோ அதுதான் படிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைத் திணித்தார்கள். இப்போது அது இல்லை. பிள்ளைகளின் ஆசையே பெற்றோரின் ஆசையாக இருக்கிறது. ஆனாலும் சமூக அழுத்தத்தால் சில பெற்றோர் தனது கனவைத் திணிக்கத் தான் செய்கிறார்கள். இந்த காலகட்டத்தில் போட்டிகள் அதிகம், ஆனதால் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் அவர்களது திறமையை மீறி எதிர்பார்க்கிறார்கள். தன் பிள்ளைகளுக்கு எது சரி என்று பெற்றோர்கள் யதார்த்தத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் அதேபோல் அவர்களின் ஆசைகளைத் திணிக்கக் கூடாது. இதற்கு இடையே உள்ள சமநிலையைப் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் புரிய வைக்க வேண்டும்.

> டிஜிட்டல் சுதந்திரம் என்பதை அப்பாக்கள் எவ்வாறு கையாள வேண்டும்?

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவதில்லை மொபைலில் படம் காட்டிதான் சோறு ஊட்டுகிறார்கள். அந்த அளவுக்கு குழந்தையிலே பழக்கப்படுத்தி விடுகிறோம். நாளடைவில் அது அவர்களின் கவனம் சிதறக் காரணமாகிறது. சமுக வலைத்தளங்களால் நன்மை தீமை இரண்டுமே உள்ளது. இதையெல்லாம் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு அப்பாக்களிடமும் உள்ளது. அதை முற்றிலும் தவிர்க்காமல் சமுக ஊடகங்களை எவ்வாறு பாதுகாப்பாக பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அப்பாக்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் அப்பாக்கள் பிள்ளைகளிடம் அதிக தரமான நேரம் செலவிட வேண்டியது அவசியம் உடற்பயிற்சி செய்வது, விளையாடுவது, புத்தகங்கள் வாசிப்பது போன்றவற்றில் குழந்தையில் இருந்தே அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

> அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதில் ஆண்குழந்தை வளர்ப்பு முக்கியத்துவம் பெறும் நிலையில், இதில் அப்பாக்களின் பங்களிப்பு எத்தகையது?

எப்போதும் பெண் பிள்ளைகளிடம்தான் எப்படி பாதுகாப்பாக இருக்கவேண்டும், எப்படி உடை அணிய வேண்டும் என்று எல்லோரும் அறிவுரை சொல்லி வளர்ப்பார்கள். ஆனால் முதலில் ஆண் பிள்ளைகளிடம்தான் எதிர் பாலினம் பற்றிய புரிதலை கொண்டு வரவேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லித் தரவேண்டும். அவர்களிடம் எப்படி பேச வேண்டும், பார்க்க வேண்டும் என்பதை சொல்லி வளர்ப்பது அவசியம். அந்தக் கடமை அப்பாக்களிடமே உள்ளது. அவரும் அந்த வயதை கடந்துதான் வந்திருப்பார். இது சமூகத்தில் நிகழும் அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் தீர்வாகும்.

> உங்கள் அனுபவத்தில் அப்பாக்கள் அதிகம் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினைகள் என்னென்ன? அவற்றுக்கான பொதுவான தீர்வாக நீங்கள் முன்வைப்பவை?

அப்பாக்கள் முந்தைய தலைமுறையை விட இப்போது எவ்வளவோ மாறி விட்டார்கள் தன் பிள்ளைக்கு தகப்பனாகவும் ஒரு நல்லா நண்பனாகவும் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால் இந்த காலத்திலும் அப்பாக்கள் நூறு சதவீதம் நண்பன் ஆகவும் முடியாது அவர் தந்தை என்பதை மறந்து விடவும் கூடாது. அவர் கண்டிப்பதாகவும் இருக்க வேண்டும், அன்பாகவும் இருக்க வேண்டும் இதுதான் மிகவும் முக்கியம். இப்போது உள்ள குழந்தைகளால் அவர்கள் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் பக்குவம் இல்லாததால் மனதளவில் உடைந்து போய் விடுகிறார்கள். அதிகம் செல்லம் கொடுத்து வளர்ப்பதும் இதற்கு ஓர் காரணமாக அமைகிறது. பிள்ளைகளுக்கு தேவைக்கு அதிகமான பணம் கொடுப்பது சில சமயம் தவறான செயல்களில் ஈடுபட தூண்டும். போதைக்கு அடிமையாவது போன்ற சில சிக்கல்களிலும் மாட்டிக் கொள்வார்கள். இதை அனைத்தும் பொறுப்புடன் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லி அவர்களை நல்வழி படுத்துவது பெற்றோர்களின் கடமை. அதிலும் அப்பாக்கள் பிள்ளைகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களை குழந்தையிலே விதைக்க வேண்டும்.

இன்று - ஜூன் 18, 2023 - தந்தையர் தினம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x