Last Updated : 18 Jun, 2023 12:43 PM

Published : 18 Jun 2023 12:43 PM
Last Updated : 18 Jun 2023 12:43 PM

‘என் அப்பா’ - பிரபலங்களின் வாரிசுகள் பகிரும் நெகிழ்ச்சிக் கதைகள் | Father's Day Special

ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தைதான் ஹீரோ. அதுவும் பெண் குழந்தைகளுக்கு என்றால் கேட்கேவே வேண்டியது இல்லை. தந்தை மீது பாசம் தனிதான். தந்தையைப் போன்ற நண்பர்கள் யாருக்கும் அமைவதில்லை. குடும்பத்தில் எத்தனைக் கஷ்டங்கள் இருந்தாலும், அதனை அவர்களிடம் காட்டாது, குழந்தைகளைப் பாதுகாத்து, வளர்த்து, ஆளாக்கி, அழகு பார்ப்பவர்கள் தந்தை. தந்தையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்களின் வாரிசுகள் தங்களது தந்தையைப் பற்றி பகிர்ந்துள்ளனர்.

அவர் ‘ஆயிரம்’ சொன்னார்; நான் ஆயிரத்துக்கும் மேல்!

நடிகர் ஜெய்சங்கர் பற்றி அவரது மகன் விஜய் சங்கர்: என்னை டாக்டராக பார்த்ததில் அப்பாவுக்கு நிறைய சந்தோஷம். அதிலும் கண் மருத்துவராக நான் ஆனது கூடுதல் சந்தோஷம். அப்போது அவர், "படிச்சது பெருசு இல்லை. நீ என்னைப் போலவே பலருக்கும் உதவி செய்யணும்" என்று சொன்னார். அதனாலேயே இன்றும் என் தந்தை பிறந்த நாள், திருமண நாள் மற்றும் விசேஷ நாட்களில் இலவசமாக பலருக்கும் கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறேன். மேலும், என்னை 'ஆயிரம் ஆபரேஷனாவது பண்ணிடுப்பா' எனவும் வாழ்த்தினார்.

அந்தக் கூற்றை நிஜமாக்கி, நான் இப்போது என்னுடைய 25 வருட அனுபவத்தில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண் ஆபரேஷன்கள் செய்து முடித்திருக்கிறேன். அதில் அவர் அகமகிழ்ந்திருப்பார் என்பது எனது எண்ணம்.

அப்பாவின் 100-ஆவது படமான `இதயம் பார்க்கிறது` என்ற படத்தில்கூட கண் பார்வை இழந்தவர் வேடத்தில் நடித்து இருப்பார். பொதுவாகவே அப்பாவுக்கு கண் தெரியாதவர்களை மிகவும் பிடிக்கும். அவர்களுக்காக அப்பா வெளியே தெரியாமல் நிறைய செய்திருக்கிறார். அதே கண் சார்ந்த துறையில் நான் மருத்துவர் என்பதாலும், அப்பா சினிமாத்துறையைச் சேர்ந்தவர் என்பதாலும் நான் வருடத்தில் ஒரு முறை சினிமா துறையினருக்கும் இலவச கண் முகாம் நடத்தி வருகிறேன். இது நான் எனது தந்தைக்கு செலுத்தும் நன்றிக் கடன்.

மருத்துவர் விஜய் சங்கர்

அப்பாவிடம் நான் வியந்து பார்த்தது என்னவென்றால், நண்பர்கள். அவ்வளவு நண்பர்களை ஒருவர் சம்பாதிக்க முடியுமா என்றால் எனக்கு அவரின் மீதான ஆச்சரியம் கூடிக் கொள்கிறது.

அதேபோல, நான் பார்த்தவரையில் பணத்தின் மீது பற்றற்றவராக அப்பா இருந்தார். நிறைய உதவிகள் கேட்கப்பட்டும், கேட்கப்படாமலும் செய்வார். வெளியே தெரியாத அளவில் செய்து கொண்டே இருந்தார். அப்பா பற்றி நான் நிறைய விஷயங்கள் அவரின் இறப்புக்குப் பின்புதான் தெரிந்துகொண்டேன். இன்று அப்பா இல்லாததாக நான் எந்தச் சூழலிலும் உணரவில்லை. அவர் எல்லாவிதத்திலும் என்னுடன் இருந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

ஆனால் அப்பாவைப் பற்றி நிறைய பேர் இன்றும் நல்லவிதமாக சொல்லி கேட்கும்போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதுபோல அப்பா, வீட்டு விசேஷங்கள் எதுவாக இருந்தாலும் ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போய்த்தான் விருந்து வைத்து கொண்டாடுவார்.

வீட்டில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அதை ஆதரவற்றோர் இல்லங்களில் கொண்டாடுகிற வழக்கம் அப்பாவுக்கு உண்டு. அங்குள்ள குழந்தைகளுக்கான விருந்தை தனக்குத் தெரிந்த பிரபலமானவர்களைக் கூப்பிட்டு அவர்களின் கைகளால் பரிமாற வைப்பார்.

"எல்லா செலவுகளையும் நீங்க பண்ணிட்டு, அதை ஏன் மற்றவர்கள் கைகளால் தரச் சொல்றீங்க?" என்று அப்பாவிடம் ஒரு நண்பர் கேட்டதற்கு, "நான் கூப்பிட்டு வருகிற பெரிய மனிதர்கள் யாரும் இந்த மாதிரி இடங்களுக்கு இதுவரை வந்து இருக்க மாட்டாங்க. அதனால இது ஒரு வாய்ப்பாக இருந்து, இந்த உதவி அவர்களில் சிலர் மனதைத் தொட்டால் போதும். நாளைக்கு அவர்களும் இதேமாதிரி உதவிகளைச் செய்ய முன் வருவார்கள். என் முயற்சி அதற்கு ஒரு தூண்டுதலாக அமையட்டுமே அதுக்காகத்தான்" என்றிருக்கிறார்.

இன்றும் அப்பாவின் நண்பர்கள் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், மூத்த அமைச்சர்கள் போன்றோர்கள் என்னிடம் பேசும்போது எல்லாம் நீங்கள் உங்கள் அப்பாவையே மிஞ்சிவிட்டீர்கள்’ என்று சொல்லி மகிழ்கிறார்கள். ஆனால், நான் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். எப்போதும் அவரின் நிழல் தான் நான் . என்றுமே ஜெய்சங்கர் மகன் தான் நான். அதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று நெகிழ்கிறார் மருத்துவர் விஜய் சங்கர்.

அப்பாவுடன் கார்த்திக்

நீ சொன்னா கட்டாயம் போகலாம்; ஆனா, தலைப்பு என்ன?

க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமாரின் மகன் கார்த்திக்குமார்: அப்போது எனக்கு வயது 4 இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் அழகாக நினைவு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அப்பா என்னை சைக்கிளில் ப்ரன்ட் பாரில் உட்கார வைத்து கோயிலுக்கு ஒட்டிக்கொண்டு செல்வார். கோயிலில் திரும்பி வரும்போது ஏதாவது திண்பண்டம் அல்லது பட்டம் செய்யும் கலர் காகிதங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதால் அந்த சிறுதூர பயணம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏதும் கிடைக்காவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு ரைடு கிடைத்தது என்று சந்தோஷப் பட்டுக்கொள்வேன்.

நாங்கள் கோவையில் குடியிருந்த பகுதி உறவினர்களாலும் அவரின் நெருங்கிய நண்பர்களாலும் சூழப்பட்ட இடம். அங்கு அவர் (அப்பா) ராஜேஷ்குமார் இல்லை... கோபால் அல்லது ராஜகோபால். அப்பா படித்த மற்றும் ஆசிரியர் வேலையில் இருந்த பள்ளியில்தான் நானும் படித்தேன். அதனால் அங்கேயும் அவர் ராஜகோபால் என்றுதான் அறியப்பட்டார். அதேபோல் பள்ளி படித்த காலத்தில் என் உலகம் மிகவும் சிறியது. வீடு, பள்ளி, நான் பயணித்த தெரு.. அவ்வளவுதான். அதனால் அப்பா எப்படி ராஜகோபால் என‌‌ அறியப்பட்டாரோ அதே பிம்பம்தான் இருந்தது.

காலம் செல்ல செல்ல... என்‌ பதின்ம வயதுகளிலிருந்து வெளிவரும்போது ராஜேஷ்குமார் என்ற பெயர் எனக்கும் மிகவும் பரிச்சயமாக மாறியது.

காரணம் இரண்டு.

ஒன்று... போஸ்ட்மேன் தினமும் இருவேளைகளும் பைகள் நிறைய கடிதங்கள் மற்றும் புத்தகங்களைக் கொண்டு வருவார். நேரம் இருப்பின் அப்பாவுக்கு, தம்பியும் நானும் அவற்றையெல்லாம் பிரித்து கொடுப்போம்.

இரண்டாவது... வீட்டிற்கு தினந்தோறும் நிறைய வாசகர்கள், பத்திரிகையாளர்கள் என வந்துக்கொண்டே இருந்தார்கள்.

நாங்கள் வார நாட்களில் பள்ளி முடிந்து வந்தால்... அழைப்பு மணி ஒலித்துக்கொண்டே இருக்கும். கதவை திறந்து அவர்களுடன் உரையாடுவது நானும் தம்பியும்தான். வார இறுதியில் இது மிகவும் அதிகமாக இருக்கும்.

அப்பா ரொம்ப பிஸியாக இருக்ககூடிய நேரங்களில் வரும் வாசகர்களை பத்திரிகையாளர்களை சில நேரங்களில் சந்திக்க இயலாமல் போகும். அந்த நேரங்களில் அவர்களிடம் , நீங்கள் இன்னொரு நாள் வாருங்கள் என்று அவர்களிடம் சொல்வதற்கு எனக்கு சங்கடமாக இருக்கும். என்ன சொல்வதென்றே தெரியாது. மிகவும் கடினமான வேலை அது. ஒருகட்டத்தில் தம்பியும் நானும்... காலிங் பெல் அடித்தாலே, கதவை நீ திற, நான் திற என சண்டை போட்டு, அதற்கு அம்மாவிடம் அடியும் விழுந்திருக்கிறது.

அவரோட வேலை முழுக்க, உடல் சார்ந்து இல்லாமல் மூளை சார்ந்தது என்பதால்... உடற்பயிற்சிக்காக எங்களோடு தினமும் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடுவார்.

அப்போது அப்பா, விளையாடுவது சிறுவர்கள் என்ற பாரபட்சமின்றி விளையாட்டில் பட்டையை கிளப்புவார். நாங்களும் சளைக்காமல் பந்து வீசுவதில் இருந்து அடித்து விளாசுவது வரை சக தோழனாக அப்பாவோடு மல்லுக்கட்டுவோம். இந்த கிரிக்கெட்தான் எங்களை மிகவும் இறுக்கமாக பிணைத்தது. அப்பாவை நண்பனாக எங்களுக்கு காட்டியது.

அப்பாவை நினைத்தால் எப்பொழுதும் பெருமிதம் தான். மிகவும் சின்ன வீட்டில்தான் தன் கேரியரை அவர் தொடங்கினார். அந்த வீட்டில் இருந்தா? இவ்வளவு கதைகளையும் எழுதினார் அப்பா என்று நினைத்துப்பார்க்கும்போது இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. எழுத்துலகில் எழுதுவதற்கு சுகமான சூழல்கள், சில கெட்ட பழக்கங்கள், ஏகாந்தமான இடங்கள், மனநிலை வேண்டும் என்று‌ பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன். ஆனால், 10க்கு 10 அடி பிஸியான சமையலறையில் மேஜை நாற்காலி போட்டு கதைகளை எழுதியது எல்லாம் ஜென் நிலை அடைந்தால் தான் சாத்தியம். அது அப்பாவுக்கு கைப்பெற்றிருந்தது.

அப்பா இதுவரை, தான் எழுதிய எந்தக் கதைகளையும் படியுங்கள் என்று எங்களைச் சொன்னதே இல்லை. எப்போதும் மிகவும் நார்மலாக பேலன்ஸ்ட் ஆக இருப்பார். பொருளாதாரப் பிர்ச்சினைகள் மற்றும் எழுத்துப்பணிகளில் பளு இருந்தாலும் அந்தக் கஷ்டங்களை எங்களிடம் ஒருநாளும் காட்டிக்கொண்டது இல்லை. அதிலும் அந்தநேரத்தில் அப்பா 4, 5 பத்திரிகைகளுக்கு தொடர்ந்து தொடர் எழுதிக் கொண்டிருந்தார். எப்படித்தான் அவர் அந்த காலகட்டங்களையெல்லாம் மேனேஜ் பண்ணினார் என்று நினைக்கும்போதிலிருந்து, அவர் நேரத்திற்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் எந்தளவு என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

நேரத்தை மிகச் சரியாக கடைபிடிப்பதில் அப்பாவை மிஞ்ச முடியாது. வீட்டில் எப்போதும் அவர், அவருக்கே அவருக்கான ஒரு இடத்தில் இருந்து யோசித்துக்கொண்டே அவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பார். செய்யும் செயல்களில் எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். சிறு‌காகிதத்தைக் கூட வீணாக்க மாட்டார்.

அப்பாவின் உலகமே எப்போதும் தனி தான். அப்பாவுக்கு எந்தக் கெட்டப் பழக்கங்களும் கிடையாது. சிடுசிடுவென இருந்து நாங்கள் அவரைப் பார்த்ததே இல்லை. எந்தவொரு பிரச்சினை வந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லுவார். நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உள்ள மனிதர். இது எல்லாமே அப்பாவின் ப்ளஸ்.

அவ்வப்போது ஹோட்டலுக்கு சாப்பிட செல்வோம். அந்தநேரத்தில் அப்பா, தான் எழுதும் கதையைப் பற்றி பகிர்ந்துகொள்வார். "கதை இதுதான், இதுக்கு டைட்டில் என்ன வைக்கலாம்?" என்று கேட்பார். நீங்க சொல்லிவிட்டால் ஐஸ் கிரீம் வாங்கித் தருகிறேன் என்பார். உடனே நாங்க எப்படி சொல்ல... அதனால் கன்னா பின்னாவென்று யோசித்து பார்த்துக் கொண்டிருப்போம். டைட்டில் அப்பா யோசித்ததுபோல சொல்ல வேண்டும் என்பதற்காக எவ்வளவு மெனக்கெட்டாலும் கிட்டத்தட்ட, என்று சொல்கிற அளவில்கூட பக்கத்தில் வந்ததில்லை எங்களது தலைப்புகள். ஆனாலும் அப்படி முயற்சி செய்வோம். தலைப்பு தப்பா சொன்னாலும், ஐஸ் கிரீம் கிடைத்துவிடும்.

நாம் ஒரு இடத்துக்கு வற்புறுத்தி அழைக்கும்போது, அதனை ஒத்திப்போடுவதற்காகவே ஒரு அருமையான ஐடியா வைத்திருப்பார் அப்பா. என்ன அந்த ஐடியான்னா... என்னை அசத்தற மாதிரி ஒரு தலைப்பு சொன்னா கட்டாயம் போகலாம்; ஆனா, அந்த தலைப்பு அவரை அசத்துமா அப்படின்றது மிகப் பெரிய கேள்விக்குறி.

வருடங்கள் செல்லச் செல்ல அப்பாவைப் பற்றி‌ பல விஷயங்கள் முழுமையாக புரிந்தது. இப்போது அப்பாதான் எனக்கு முதன்மையான ரோல்மாடல் என்கிறார் கார்த்திக்.


பெண் குழந்தைகள் என்றும் அப்பாவின் உலகத்தில் தேவதைகள் தான்!

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் மகள் ஸ்வர்ண ரம்யா: அப்பா எல்லோருக்கும் ஸ்பெஷல். எனக்கும் அப்பா ஸ்பெஷல். என் வாழ்வின் அனைத்து சிறந்த விஷயங்களுக்குமான ஒரு காரணகர்த்தான்னா அது அப்பா மட்டும் தான். அப்பாதான் எல்லா முடிவுகளிலும் எனக்கு இன்றுவரை உற்ற தோழனாக இருக்கிறார். எங்களுக்கு என்ன வேணும் என்பது அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். இதுதான் வேணும்னு நாங்கள் கேட்பதற்கு முன்னாடியே அது கிடைத்துவிடும். அந்த அளவுக்கு எங்கள் மீதான புரிதல் உள்ளவர்.

அப்பா எங்களோடு இருக்கும் நேரங்களில் அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார். அந்த மகிழ்ச்சி எங்கள் வீடு முழுவதும் நிறைந்திருக்கும் எப்போதும். இப்போது நான் கனடாவில் இருப்பதால் அப்பாவை நிறைய மிஸ் பண்ணுகிறேன். சம்மர் விடுமுறைகளில் கட்டாயம் ஒரு குடும்ப ட்ரிப் இருக்கும். எங்களோடு டைம் எடுத்துக்கொள்ள நிறைய மெனக்கெடுவார் அப்பா.

இன்று மொபைல் போன் உலகம் என்றாகிவிட்டது. அதனால் குடும்பங்களில் பக்கத்தில் இருப்பவர்களோடுகூட யாரும் பேசிக்கொள்வது இல்லை. எங்கள் வீட்டில் மொபைல் போனுக்கு மதிப்பு குறைவுதான். அவரின் கதைகளில் எங்களிடம் கருத்து கேட்பார். அதற்கு அதிக முக்கியத்துவம் தருவார். சின்னச் சின்னப் பரிசு பொருட்கள் எப்போதும் வாங்கி வருவார். அந்தப் பழக்கத்தை இன்றுவரை மாற்றிக்கொள்ளாமல் நான் கனடாவில் இருக்கின்றபோதிலும்கூட வாங்கி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அப்பாவுடன் ஸ்வர்ண ரம்யா

அப்பா, எங்களின் படிப்பு முதல் அனைத்து விஷயங்களிலும் எங்களின் விருப்பம் முக்கியம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதேபோல எனக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று நினைத்தப்போதிலும்கூட, அப்பா என்னிடம் கேட்ட முதல் கேள்வி, உன் மனதில் யாராவது இருக்காங்களா? யாரையும் லவ் பண்றியாமான்னுதான். நான் இல்லை என்று சொன்னபிறகு தான் திருமணத்துக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். பெண்களுக்கான முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். வெளி உலகத்தை எதிர்கொள்ளக்கூடிய எல்லா தைரியத்தையும் அவர் எனக்கு கொடுத்தார். திருமணம் ஆனாலுமே பெண் குழந்தைகள் என்றும் அப்பாவின் உலகத்தில் தேவதைகள் தான், இளவரசிகள் தான்.

நான் அப்பாவை அழ வைத்திருக்கிறேன். எனது திருமணத்தின்போது என்னைவிட்டு பிரியும் சூழலில் அப்பா மிகவும் அழுதுவிட்டார். அந்த வலிமிகு பாசத்தை அப்பாக்களாலும் மகள்களாலும் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிற ஒருவகையான உணர்வு. அப்பாவை அழ வைத்துவிட்டோமோ என்கிற எண்ணம் எனக்கு வேதனையைத் தந்தது. அது மறுபடியும், எனது கணவரின் வேலை நிமித்தமாகத்தான் நாங்கள் கனடா செல்ல வேண்டிய சூழலில் எதிரொலித்தது. அந்தநேரத்திலும் அப்பா அழுதுவிட்டார். அவரின் பாசம் எங்களின் மீது எப்போதும் தனி தான். அதுபோக அப்பா கனடா வந்து எங்களோடு, தங்கி இருந்த அந்த இரண்டரை மாதங்களை எப்போதும் என்னால் மறக்க முடியாது.

எல்லாவற்றையும் விட அப்பாவுக்கு தமிழ் என்றால் மிகவும் பிடிக்கும். என்னோட தமிழ் ஆர்வத்துக்கு முழுக்காரணம் அப்பா மட்டும்தான். அதனால் தான் நாடு கடந்திருந்தாலும், தமிழ் மீது எங்களுக்கு எப்பொழுதும் தனி காதல் தான் என்கிறார் ஸ்வர்ண ரம்யா.

இன்று - ஜூன் 18, 2023 - தந்தையர் தினம்

- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x