Last Updated : 17 Jun, 2023 06:30 AM

 

Published : 17 Jun 2023 06:30 AM
Last Updated : 17 Jun 2023 06:30 AM

2 ஆண்டுகளில் 200 உடல்கள் அடக்கம்: சிவகங்கையில் தந்தையுடன் கைகோத்த தனயன்!

சிவகங்கை: சிவகங்கையில் கரோனா காலத்தில் தொடங்கிய சேவையை தந்தை, மகன் இருவரும் விடாமல் தொடர்ந்து வருகின்றனர். 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்டோரின் உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.

கரோனா பரவல் அதிகமாக இருந்த 2021-ம் ஆண்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 20 முதல் 25 பேர் வரை உயிரிழந்தனர். அச்சமயத்தில் கரோனா அச்சத்தால் இறுதிச்சடங்கு செய்வதற்கு உறவினர்கள்கூட முன்வரவில்லை.

இதையடுத்து சிவகங்கையைச் சேர்ந்த தன்னார்வலரும், திமுக நகராட்சி கவுன்சிலருமான அயூப்கான்(47), அவரது மகன் ராஜா(19) ஆகியோர் சிலரின் உதவியோடு இறந்தோரின் உடல்களை அடக்கம் செய்தனர்.

மேலும் இறந்தோரின் மத வழக்கப்படியே இறுதிச் சடங்குகளை பணம் வாங்காமல் சேவை மனப்பான்மை யோடு இரவு, பகல் பாராமல் செய்தனர்.

கரோனா காலகட்டத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோரின் உடல்களை அடக்கம் செய்தனர். தற்போதும் அந்தச் சேவையை விடாமல் இருவரும் தொடர்கின்றனர். இதுவரை 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளனர். இதுதவிர ஆதரவற்றோருக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர்.

இதுகுறித்து அயூப்கான் கூறியதா வது:

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு நேரம் பார்க்காமல் எப்போது அழைத்தாலும் செல்கிறோம். கரோனா முதல் அலையிலேயே எங்களது சேவை தொடங்கிவிட்டது. அப்போது 16 பேரின் உடல்களை உரிய இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தோம். இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக இருந்ததால், 150-க்கும் மேற்பட்டோரை அடக்கம் செய்தோம். தற்போது ஆதரவற்றோர், ஏழைகளின் உடல்களையும் நல்லடக்கம் செய்து வருகிறோம்.

எங்களது சேவையைப் பாராட்டி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் எனக்கு விருது வழங்கினார். வாழும் காலம் கொஞ்சம்தான், அதில் பாவம் சம்பாதிப்பதை விட புண்ணியத்தை சேர்க்க வேண்டுமென எனது மகனுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளேன். அதன் பலனாக என்னோடு சேர்ந்து, அவரும் இச்சேவையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x