Published : 16 Jun 2023 03:30 PM
Last Updated : 16 Jun 2023 03:30 PM

5 நாட்கள் தொடர்ச்சியாக நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த இந்திய சிறுமி!

ஸ்ருஷ்டி | படம்: ட்விட்டர்

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமியான ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தீப், தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு நடனமாடி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் கின்னஸ் உலக சாதனையு புத்தகத்தில் அவர் இடம் பிடித்துள்ளார். தனி நபராக சுமார் 127 மணி நேரம் நடனமாடி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். கின்னஸ் உலக சாதனை தளத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் (மே) 29-ம் தேதி இந்த நடனமாடும் முயற்சியை அவர் தொடங்கியுள்ளார். இது கடந்த 3-ம் தேதி வரை தொடர்ந்துள்ளது. இந்திய கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் கதக் நடன முறையை பின்பற்றி, அவர் நடனமாடி உள்ளார். தனது நடன கலையின் மூலம் இந்தியா சார்பில் பங்கேற்பது தனது கனவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக பல மாதங்களாக அவர் தயாராகி வந்துள்ளார். நாள்தோறும் 4 மணி நேரம் தியானப் பயிற்சி, 3 மணி நேரம் உடற்பயிற்சி, 6 மணி நேரம் நடனமும் ஆடி பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கு முன்னர் நேபாள நாட்டைச் சேர்ந்த பந்தனா, தொடர்ச்சியாக 126 மணி நேரம் நடனமாடியதே உலக சாதனையாக இருந்தது.

இந்த நடன சாதனை முயற்சி விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. இசையின் தாளத்திற்கு ஏற்ப தனது கால்களை ஸ்ருஷ்டி தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது விதிகளில் ஒன்று. இது அர்ப்பணிப்பு மற்றும் நடனத்தில் ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். அதை அசாத்தியமாக வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார் ஸ்ருஷ்டி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x