

நம்மில் சில மனிதர்களின் வெற்றிக் கதை ஆயிரக்கணக்கான பேருக்கு உத்வேகம் கொடுக்கும். அப்படியொரு உத்வேகத்தைத் தான் கொடுக்கிறது விஜய் சங்கேஷ்வரின் கதை. இவரது கதை சூர்யவம்சம் படத்தில் வரும் ‘சின்னராசு’ சரத்குமாரின் கதாப்பாத்திரத்தை நமக்கு நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வசித்து வந்த குடும்பத்தில் கடந்த 1950, ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தார் விஜய் சங்கேஷ்வர். அவரது அப்பா அச்சகம் சார்ந்த தொழில் செய்து வந்துள்ளார். ஆனால், விஜய் சங்கேஷ்வரின் விருப்பம் போக்குவரத்து தொழில் சார்ந்து இருந்துள்ளது. வணிகவியல் சார்ந்து கல்வி பயின்றுள்ளார்.
தனது தொழில் ஆர்வத்தால் சுமார் 2 லட்ச ரூபாய் கடன் பெற்று சொந்தமாக ஒரு டிரக் வாங்கியுள்ளார் அவர். தொடக்கத்தில் அந்த தொழிலில் பல்வேறு சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார். ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்கள் என தொடர்பியல் சார்ந்து அந்த சிக்கல் இருந்துள்ளது. அதே நேரத்தில் நிதி சார்ந்த சிக்கல்கலையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.
இருந்தும் சிறிதும் சளைக்காத அவர் தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். தொழில் நிமித்தமாக தனது குடும்பத்துடன் ஹூப்ளிக்கு அவர் இடம் பெயர்ந்துள்ளார். தொடர்ந்து 1983-ல் விஜயானந்த் ரோட் லைன்ஸ் லிமிடட் எனும் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கினார். 90-களில் அவர் வசம் இருந்த டிரக்குகளின் எண்ணிக்கை 150 என உயர்ந்துள்ளது. அப்படியே கொரியர் நிறுவனம், பயணிகள் பேருந்து சார்ந்த முயற்சி என அது விரிவடைந்தது.
அதன் பலனாக கடந்த 1994-ல் விஆர்எல் குழுமத்தை தொடங்கினார். தற்போது 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என நாட்டில் அவரது விஆர்எல் குழுமம் இயங்கி வருகிறது. கொரியர், போக்குவரத்து, விமான தளவாடம், பத்திரிகை என இயங்கி வருகிறது. தற்போது விஆர்எல் குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.6,000 கோடிக்கு மேல் உள்ளது. விஜய் சங்கேஷ்வரின் நிஜக்கதை திரைப்படமாகவும் வெளியாகி உள்ளது. அரசியலிலும் அவர் ஈடுப்பட்டுள்ளார். ஒரு டிரக்கில் தொடங்கி இந்தியாவின் முன்னணி வணிக வாகன ஸ்தாபனமாக மாறியுள்ளது.