Published : 15 Jun 2023 08:45 PM
Last Updated : 15 Jun 2023 08:45 PM

பார்க்கிங் ஏரியாவாக மாறிப்போன ஜார்ஜ் சிலைக்குப் பின்னால் ‘சென்னை வரலாறு’!

காலை வேளையில் சென்னையின் மிகவும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் இதுவும் ஒன்று. எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகள் சாலையைச் சுற்றி வளைந்து கொண்டிருந்தன. பேருந்து சத்தம் ஒருபக்கம், வர்த்தகம் செய்யும் வியாபாரிகளின் குரல்கள் மறுபக்கம். சென்னை பிராட்வேயில் அமைந்துள்ள பூக்கடை பற்றித்தான் உங்களிடம் விவரித்துக் கொண்டிருக்கிறேன்.

சென்னை பிராட்வே - பூக்கடைப் பகுதியில் பிரமாண்டமாக அமைந்திருந்த ஜார்ஜ் சிலையை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா...? நீங்கள் கவனிக்கவில்லை என்றாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய அடையாளமாக இருந்த ஜார்ஜ் சிலை அதன் இயல்பை இழந்து நிற்கிறது.

யார் இந்த ஜார்ஜ்? - இவர் 1865-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி லண்டனில் வேல்ஸ் இளவரசரின் இரண்டாவது மகனாக பிறந்த ஐந்தாம் ஜார்ஜ். தனது 18 வயதிலேயே கடற்படைக்கு சென்றவர். ஆனால், கடற்படை பயணம் ஜார்ஜ்க்கு நீண்ட காலம் அமையவில்லை. காரணம், ஜார்ஜின் அண்ணன் எதிர்பாராமல் இறக்க, அவர் கடற்படையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படுகிறது. மே 1910-ல் ஜார்ஜின் தந்தை இறந்த பிறகு பிரிட்டனின் மன்னராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிட்டனின் கீழ் இந்தியா இருந்த காலக்கட்டம் என்பதால் இந்தியாவின் மன்னராக ஐந்தாம் ஜார்ஜ் கருதப்பட்டார்.

முன்பு இருந்த பிரிட்டனின் மன்னர்களிடமிருந்து சற்று தனித்து விளங்கினார் ஜார்ஜ். தனது பாட்டி ராணி விக்டோரிய மற்றும் தனது அப்பா ஏழாம் எட்வர்ட் ஆட்சியை போல் இல்லாமல் தனது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயன்றார். இதனால், ஜார்ஜுக்கு பிரிட்டன் மக்களிடம் நல்ல செல்வாக்கு இருந்தது.

மன்னர் ஜார்ஜ்க்கும் இந்தியாவுக்குமான தொடர்பு : மன்னரான இருந்தபோது ஜார்ஜ் வணிக நோக்கத்துக்காக இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது சென்னையின் முக்கிய பிரதான பகுதிகளாக ஆங்கிலேயரின் இருப்பிடமாக கருதப்பட்ட வைட் டவுன் அதாவது தற்போதுள்ள தலைமைச் செயலகம் பகுதி. அதனைச் சுற்றி இருந்த பகுதிகளாக ப்ளாக் டவுனும் இருந்தன. ஆனால், இந்த ப்ளாக் டவுன் என்ற பெயரை இங்கிருந்த தமிழர்கள் விரும்பவில்லை. இந்தியா வந்த மன்னர் ஜார்ஜிடம் ப்ளாக் டவுன் பெயரை மாற்றுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த ஜார்ஜ் டவுன் இப்போது சென்னை நகரின் வணிக பகுதியாக மட்டும் இல்லாமல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை தற்போது இருக்கும் முக்கிய அரசு அலுவலகங்கள், கலங்கரை விளக்கம், பழைய பிரிட்டிஷ் கேலரி, சென்னை உயர் நிதிமன்றம் சில வெளிநாட்டு அலுவலகங்கள் உள்ளன.

இந்தப் பெயர் மாற்ற நிகழ்வின் சிறப்பு அங்கமாகதான் 1914-ஆம் ஆண்டு இப்போது இருக்கும் பூக்கடை காவல் நிலையம் அருகே 10 அடி உயர அளவிலான மன்னர் ஜார்ஜின் சிலையை இந்திய சிற்பி எம்.எஸ்.நாகப்பா செதுக்கினர். இவ்வாறுதான் ஜார்ஜின் சிலை இங்கு வந்தது.

பாரிஸ் என்கிற ஜார்ஜ் டவுன்: ஜார்ஜ் டவுன்தான் இப்போது பறந்து விரிந்து இருக்கும் நமது சென்னையின் வளர்ச்சிக்கான ஆரம்ப இடம். ஜார்ஜ் டவுன்னில் உள்ள மிக முக்கிய வணிக பகுதிகளில் ஒன்று கொத்தவால் சாவடி என்ற பெரியச் சந்தை. இந்தச் சந்தைக்கு வெளிப் பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் காய், பழங்கள் போன்ற பொருட்களை வியாபாரம் செய்கின்றனர். அந்த அளவு பெருவாரியான மக்கள் வருகை தரும் சந்தையாக இது உள்ளது.

அடுத்தது பர்மா பஜார். எலக்ட்ரானிக்ஸ் முதல் அனைத்து பொருட்களும் மிகவும் மலிவாக கிடைக்கும் இடமாக பர்மா பஜார் உள்ளது. இந்த பஜார் ஒரு காலத்தில் பர்மாவிலிருந்து வந்த அகதிகளால் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது பர்மா பஜாரின் வெளிச்சம் மெல்ல மங்கத் தொடங்கியிருக்கிறது.

பார்க்கிங் ஏரியாவாகிய ஜார்ஜ் சிலை: சென்னையின் வளர்ச்சியின் துவக்கமாக இருந்த பிளாக் டவுன் என்ற பெயரை மக்களின் கோரிக்கைகாக மாற்றி ஜார்ஜ் டவுன் என்று வைத்த ஐந்தாம் ஜார்ஜின் சிலை இப்போது யாரும் கவனிக்காமல் பழுதடைந்து காணப்படுகிறது. அச்சிலையை சுற்றி அமைந்துள்ள தளங்கள் பார்க்கிங் ஏரியாவாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், சிலையை சுற்றி செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளன. மறுப்பக்கம் கழிப்பிடமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர்.

மேலும், சிலையின் மீது போஸ்டர்களும், கிறுக்கல்களும் அரங்கேறி உள்ளன. ஐந்தாம் ஜார்ஜ் மட்டுமல்ல, சென்னையின் வரலாற்றை கூறும் பல சிலைகளின் நிலை இவ்வாறான பரிதாப நிலையில்தான் உள்ளது. நமது வரலாறுகள் நினைவுச் சின்னங்களால்தான் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன. இதனைக் கருத்தில் கண்டு, சென்னையில் பழுந்தடைந்து காணப்படும் வரலாற்று இடங்களையும், சிலைகளையும் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x