

பெங்களூரு: பெரு நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலையை இழந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் தன் வாழ்வாதாரத்துக்காக ஸ்விகி உணவு டெலிவரி நிறுவனத்தில் உணவு விநியோகிக்கும் பிரதிநிதியாக பணி செய்துள்ளார். அவருக்கு ஸ்விகி பயனர் ஒருவர் பகிர்ந்த லிங்க்ட்இன் பதிவின் ஊடாக இப்போது தகுந்த வேலையும் கிடைத்துள்ளது.
இதெல்லாம் பெங்களூருவை சேர்ந்த பிரியான்ஷி சாந்தல் எனும் ஸ்விகி பயனர் பகிர்ந்த லிங்க்ட்இன் பதிவால் நடந்துள்ளது. ஐஸ்க்ரீம் சாப்பிட விரும்பிய பிரியான்ஷி, ஸ்விகியில் ஆர்டர் கொடுத்துள்ளார். அதைக் கொண்டு வந்த ஸ்விகி பிரதிநிதி மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். டெலிவரியும் கொஞ்சம் தாமதமான காரணத்தால் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார் பிரியான்ஷி.
“மேடம், என் பெயர் சஹில் சிங். என்னிடம் இப்போது வாகனம் ஏதும் இல்லை. அதனால் உங்களது ஆர்டரை 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து டெலிவரி செய்துள்ளேன். அதுதான் தாமதமானதற்கு காரணம். இந்த ஆர்டரின் மூலம் 25 முதல் 30 ரூபாய் வரை எனக்கு கிடைக்கும். 12 மணிக்குள் அடுத்த ஆர்டரை எடுத்து, டெலிவரி செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த ஆர்டரை இங்கிருந்து தூரமான பகுதிக்கு நான் கொண்டு செல்ல வேண்டி இருக்கும்.
நான் பொறியியல் பட்டதாரி. ஜம்முவை சேர்ந்தவன். நிஞ்சாகார்ட், பைஜுஸ் நிறுவனங்களில் பணியாற்றி உள்ளேன். மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம். இப்போது நான் அங்கு வேலையில் இல்லை. அதனால் பெற்றோரை எதிர்பார்க்காமல் ஸ்விகியில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஒரு வார காலமாக தேநீரும், தண்ணீரும் மட்டுமே பருகி வருகிறேன். உணவு வாங்கக் கூட கையில் பணம் இல்லை. உங்களால் முடிந்தால் எனக்கு வேலை வாங்கித் தரவும்” என 30 வயதான சஹில் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்தது உண்மையா அல்லது பொய்யா என எதையும் ஆராயாமல் பிரியான்ஷி சாந்தல், தனது லிங்க்ட்இன் கணக்கில் அவரது கதையை பதிவாக பகிர்ந்துள்ளார். தொடர்ந்து அவரது லிங்க்ட்இன் நட்பு வட்டத்தில் இருந்தவர்களின் உதவி மூலமாக சஹிலுக்கு வேலை கிடைத்துள்ளது. அது குறித்து பிரியான்ஷி சாந்தல், லிங்க்ட்இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளத்துக்கு உள்ள சக்தியை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது. அதோடு மாடர்ன் யுக மனிதர்களின் மனிதத்துவத்தை எடுத்துச் சொல்லும் விதமாகவும் அமைந்துள்ளது.