அழிவின் விளிம்பில் மூங்கில் கூடை தயாரிப்பு
திண்டுக்கல்: தற்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பால், இயற்கை முறையில் தயாரிக்கும் மூங்கில் கூடை தொழில் நசிந்து வருகிறது.
திண்டுக்கல் நகர் கருவூலச் சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மூங்கில் கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். இதற்கான மூலப்பொருளான மூங்கிலை கேரளாவில் இருந்து வரவழைக்கின்றனர். முன்பு இந்த தொழிலில் பலர் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததால் மூங்கில் கூடை தொழில் பாதிக்கப்பட்டு பலர் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். இருந்தபோதும் சிலர் நம்பிக்கையுடன் மூங்கிலில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் தொழிலை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சிறிய கூடை ரூ.50 முதல் பெரிய கூடை ரூ. 500 வரை அளவுக்கேற்ப கூடைகளை மூங்கிலால் பின்னி விற்பனை செய்கின்றனர்.
விசிறி, கோழிகளை அடைக்க பயன்படும் பஞ்சாரம், தெருக்களை கூட்ட பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான துடைப்பான், மூங்கில் திரை ஆகியவற்றை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
சிறு வயது முதல் இந்த தொழில் செய்துவரும் 90 வயதை கடந்த முதியவர் காசிராஜன் கூறியதாவது: நான் சிறு வயதாக இருந்தபோது மூங்கில் கூடைகளுக்கு அத்தனை கிராக்கி உண்டு. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல மூங்கில் கூடைகளைத்தான் அதிகம் பயன்படுத்துவர்.
திராட்சை பழங்களை மூங்கில் கூடைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவர். மேலும் அந்த காலத்தில் வீடுகளில் மூங்கில் கூடைகளின் பயன்பாடு வாழ்வியலோடு ஒன்றியதாக இருக்கும். நாளடைவில் அனைத்தும் பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு மாறி விட்டன. இதனால் முன்புபோல, விவசாயிகள் எங்களை நாடி வருவதில்லை. நகர்புறத்தில் மக்கள் மூங்கில் கூடை பயன்படுத்துவதையே விட்டு விட்டனர்.
எங்கள் தொழிலுக்கு சுற்றுப்புற கிராம மக்களைத் தான் நம்பி உள்ளோம். கோழிகளை அடைக்க பஞ்சாரம் முதல் சிறிய கூடைகள், விசிறிகள் வரை வாங்கிச் செல்கின்றனர். எனக்கு 90 வயதாகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கூடை பின்னும் வேலையில் ஈடுபட்டு வருகிறேன். அடுத்த தலைமுறையினர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் மூங்கில் பொருட்கள் தயாரிப்பு தொழில் அழியும் நிலையில் உள்ளது. அரசு மனது வைத்தால் அரசு நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை சார்ந்த பொருட்களை எங்களை போன்றவர்களிடம் கொள்முதல் செய்யலாம். மற்ற தொழில்களுக்கு மானியம் வழங்குவதுபோல, மூங்கில் பொருட்கள் தயாரிப்புக்கும் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
