

தூத்துக்குடி: தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண பிரபு- தேவி தம்பதியரின் மகன் ஹர்சன்(9). தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஹர்சன் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடியில் உள்ள நீச்சல் குளத்தில் ஹர்சன் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5.30 மணி வரை தொடர்ந்து 7 மணி 30 நிமிடங்கள் 20 விநாடிகள் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் குளோபல் உலக சாதனை அமைப்பின் சாதனை பட்டியலில் மாணவர் ஹர்சன் இடம் பிடித்தார். ஹர்சனை தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுரேஷ் மற்றும் குளோபல் உலக சாதனை அமைப்பினர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர்.
கனிமொழி எம்.பி. டுவிட்டர் பதிவில், “நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஏழரை மணி நேரம் நீரில் மிதந்து குளோபல் உலக சாதனை படைத்திருக்கும் தூத்துக்குடி சிறுவன் ஹர்சன் இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.