Published : 13 Jun 2023 08:01 PM
Last Updated : 13 Jun 2023 08:01 PM

பணியிடத்தில் வேரூன்றிக் கிடக்கும் 'பழைய' வாசகங்கள்... - விடைகொடுக்க விரும்பும் இந்தியப் பணியாளர்கள்!

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: டூட், கூல், சில்லாக்ஸ், ப்ரோ, பட்டி, தம்ப்ஸ் அப், ஹேங் அவுட், கிரிஞ், பெஸ்டி இப்படி நிறைய வார்த்தைகள் தமிழகத்தில் உலாவரக் காரணம் ஐடி கம்பெனிகள். அங்கிருந்து வந்த சொற்கள் கல்லூரி இளசுகள் தொடங்கி பார்க்கில் வாக்கிங் போகும் வயதானவர்கள் வரை தொற்றிக் கொண்டுவிடுவது வழக்கம். இவையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஃப்ரீ டைம் வார்த்தைகள். இவை தாண்டி அலுவலகத்தில் பயன்படுத்துவதற்கென்றே சில பல பிரத்யேகப் பயன்பாடுகள் உள்ளன. ஆனால் அத்தகையப் பயன்பாடுகள் சலிப்பூட்டுவதாகவும் அவற்றை முற்றிலுமாக வழக்கிலிருந்து ஒழிக்க வேண்டும் என்றும் 71 சதவீத இந்தியத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் இந்த நூற்றாண்டில் பணியிடச் சூழல் வெகுவாக மாறியுள்ளது. அலுவலகத்தில் உயர் அதிகாரியை சார் என்று கூப்பிடும் நடைமுறை கூட மாறிவிட்டது. பெயருக்கு முன்னாள் மிஸ்டர் அல்லது மிஸ் என்று சேர்த்து அழைக்கும் கலாச்சாரம் எம்என்சி.,க்களில் வந்துவிட்டன. அந்த வரிசையில்தான் தற்போது பணியிடங்களில் பயன்பாட்டில் உள்ள பழைய வாசகங்களுக்கு விடைகொடுக்க வேண்டும் என்று நவநாகரிக ஊழியர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

உதாரணத்துக்கு “keep me in the loop” (என்னையும் மின் அஞ்சலில் இணைப்பில் வைக்கவும்) “let’s take this offline” (இதை நாம் நேரடியாக ஆலோசிப்போம்) போன்ற பழைய வார்த்தைப் பிரயோகத்தை முற்றிலுமாக கைவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். லிங்க்டு இன் (LinkedIn) மற்றும் டுவோ லிங்கோ (Duo Lingo) செயலிகள் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஜென் எக்ஸ் (1965-ல் இருந்து 1981 வரை பிறந்தவர்கள்) , மில்லனியல்ஸ் (1980 முதல் 96 வரை பிறந்தவர்கள்) பலரும் பழைய பிரத்யேக அலுவலகப் வார்த்தைப் பிரயோகங்கள் இப்போதெல்லாம் பொருத்தமற்றதாகவே இருப்பதாகக் கூறியுள்ளனர்.

லிங்க்ட் இன் (LinkedIn) மற்றும் டுவோ லிங்கோ (Duo Lingo) செயலிகள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தியப் பணியாளர்கள் 71 சதவீதம் பேர் இத்தகைய வார்த்தைகள் பயன்பாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். உதாரணத்துக்கு டேக் ஆஃப்லைன், வின் - வின் சிச்சுவேஷன், கோர் கம்பீடன்ஸி போன்ற வார்த்தைகளை அவர்கள் நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இவையெலாலம் பணியிடச் சூழலில் தெளிவற்ற வார்த்தைகள் என்று அவர்கள் காரணம் கூறுகின்றனர்.

அதேவேளையில் ஆய்வில் ஈடுபட்ட சிலர், பணியிடச் சூழலில் பயன்படுத்தப்படும் வாக்கியங்கள் தங்களின் பணியிடத்தில் முன்னேற்றத்துக்கு உதவுகிறது என்றனர். தங்களுக்கு அதனால் நிதி ஆதாயமும் கிடைப்பதாகக் கூறினர். இருப்பினும் ஹைப்ரிட் பணிச் சூழலில் இருப்பவர்களும் (சில நாள் அலுவலகம், சில நாள் வீடு) அல்லது ஒர்க் ஃபர்ம் ஹோம் - வீட்டிலிருந்து வேலை செய்பவர்களும் அலுவலகப் பயன்பாட்டுச் சொற்களை சரியான இடத்தில் பிரயோகப்படுத்துவதில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாகக் கூறினர்.

மேலும், ஆய்வில் ஈடுபட்ட 58 சதவீதம் பேர், பணியிடத்தில் சிறு சிறு தவறுகளைச் செய்ய இதுபோன்ற பிரத்யேக வார்த்தைகளே காரணமாக அமைந்துவிடுவதாகக் கூறினர். சில வார்த்தைகளின் நுணுக்கம் புரியாததால் அதைப் பயன்படுத்தி சிக்கலில் சிக்கிவிடுவதாகவும் கூறினர்.

இதனைச் சுட்டிக்காட்டி, பணியிடங்களில் சில வார்த்தைகளை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளன லிங்க்டு இன், டுவோ லிங்கோ நிறுவனங்கள்.

உதாரணத்துக்கு “let’s get our ducks in a row before this meeting” என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் இருக்கிறது. அதற்கு அர்த்தம் ஆங்கிலத்தில் (to organize your tasks and schedule so that you are ready for the next step) அதாவது வேலைகளைத் திட்டமிட்டு பட்டியலிடுவோம்; அதன் மூலம் அடுத்தக்கட்டத்துக்கு ஆயத்தமாவோம் என்பது. ஆனால், அதை இவ்வளவு சிரமமானதாக இல்லாமல் “let’s prepare and get organised before this meeting.” எளிமையாக 'இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னதாக நாம் தயாராவோம்' என்று சொல்லலாம் என்று கூறுகின்றனர்.

மொழியை எளிமையாக்குவது என்பது பணியிட கலாச்சாரத்தில் ஒரு சமநிலையையும் அனைவரையும் உள்ளடக்கிய நிலையையும் உருவாக்கும் என்று ஆய்வை மேற்கொண்ட லிங்க்ட் இன் மற்று டுவோ லிங்கோ கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக இந்தியாவில் லிங்க்ட் இன் மற்றும் டுவோ லிங்கோ 1099 பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அனைவரும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள். அனைவருமே எல்லோரையும் உள்ளடக்கும் எளிமையான மொழிச் சூழல் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்திய முதலாளிகள் பலரும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயிங்கே திரைப்படம் அல்லது F.R.I.E.N.D.S. டிவி தொடரை மேற்கோள்காட்டுவதை இன்னமும் மனமுவந்து செய்வதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய ஊழியர்கள் ‘give me your 110%,’ ‘move the needle,’ ‘low hanging fruit,’ ‘new normal.’ போன்ற வார்த்தைகள் போதும் என்று கூறுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது,

மொழிப் பயன்பாடும் விருப்பமும் உலகம் முழுவதும் வித்தியாசமானது. இந்தியாவில் ஒரே நாட்டில் பல மொழிகள் இருக்கும் நிலையில் அது சிக்கலானதாகவும் இருக்கிறது. ஆகையால் நீங்கள் பல வித்தியாசமான பின்னணியில், பல நாடுகளில், பல கலாச்சாரங்களில் இருப்பவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவாக இருக்கும்போது எல்லோருக்கும் உவந்த எளிய மொழியைப் பயன்படுத்துங்கள் என்று ஆய்வறிக்கை இறுதியாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x