Published : 06 Oct 2017 10:41 am

Updated : 06 Oct 2017 10:41 am

 

Published : 06 Oct 2017 10:41 AM
Last Updated : 06 Oct 2017 10:41 AM

அடுத்த கபில்தேவ்?

‘கபில்தேவ் போல ஒரு ஆல்-ரவுண்டர் இல்லையே’ - இந்திய ரசிகர்களின் நீ...ண்ட நாள் கவலை இது. பேட்டிங், பவுலிங்கில் ஜொலித்த கபில்தேவைப் போன்ற ஒரு ஆல்ரவுண்டரைக் காண கனவு கண்ட இந்திய ரசிகர்களுக்கு, அந்தக் கனவு இனி நனவாகலாம். கபில்தேவ்போல வருவார் எனக் கணிக்கப்படும் அந்த வீரர் ஹர்திக் பாண்ட்யா.

மைதானத்தில் இறங்கினால், சிக்ஸர்களை அநாயாசமாகப் பறக்கவிடும் ஸ்டைல், சூழ்நிலைக்கேற்ப விளையாடும் பக்குவம், பவுலிங்கில் காட்டும் ஆக்ரோஷம் போன்ற ஆல்ரவுண்டருக்கு உரிய அத்தனை அம்சங்களுடனும் வலம்வருகிறார் பாண்ட்யா. இந்திய கிரிக்கெட்டில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பேட்டிங்கிலும் வேகப்பந்து வீச்சிலும் அசத்தும் பாண்ட்யா இன்னொரு கபில்தேவாக உருவெடுப்பாரா?


06CHDKN_PTI9_17_2017_000152Aகபில் காலம்

ஒரு நாள் கிரிக்கெட் அறிமுகமான காலத்தில் அந்தப் போட்டிகளையெல்லாம் இந்திய அணி டெஸ்ட் போட்டியைப் போலத்தான் விளையாடியது. ஒரு நாள் போட்டி என்றால், எப்படி விளையாட வேண்டும் என்று தன்னுடைய பேட்டால் வகுப்பெடுத்தார், 1978-ல் அறிமுகமான கபில்தேவ். அசத்தும் பேட்டிங், அச்சுறுத்தும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் ஜொலித்த கபில், எதிரணிகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்திருக்கிறார்.

உச்சபட்சமாக இவர் தலைமையிலான இந்திய அணி 1983-ல் உலகக் கோப்பையை வென்று சாதித்ததெல்லாம் இந்திய கிரிக்கெட்டின் சாதனை வரலாறு. 1994-ல் ஓய்வு பெறும்வரை இந்திய அணியின் மையப் புள்ளியாகத் திகழ்ந்தார் கபில்தேவ்.

கபில் ஓய்வுக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசைகட்டி வந்தார்களே தவிர, ஆல்ரவுண்டர்கள் என யாரையும் பார்க்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர், கங்குலி, யுவராஜ் சிங் போன்றவர்களும் ஆல்ரவுண்டர்கள்போல சில மேட்ச்களில் விளையாடியிருக்கிறார்கள்.

ஆனால், இவர்களுடைய பந்துவீச்சு பகுதி நேரமாகவே இருந்தது. அதுவும் சுழற்பந்து, மிதவேகப் பந்துவீச்சாகத்தான் இருந்தது. வங்கதேசம், அயர்லாந்து போன்ற அணிகளில்கூட வேகப்பந்து, பேட்டிங் என இரண்டிலும் அசத்தும் வீரர்களை சர்வசாதாரணமாகப் பார்க்க முடிந்த நேரத்தில், இந்திய கிரிக்கெட்டில் அப்படி ஒரு வீரரைக் காண முடியாமல் போனது தேடுதலில் இருந்த குறை என்றுதான் சொல்ல வேண்டும்.

பாண்ட்யா காலம்

இதுபோன்றதொரு சூழலில்தான் ஹர்திக் பாண்ட்யாவின் வருகை, இந்திய அணியில் ஆல்ரவுண்டர் கவலையைப் போக்கியிருக்கிறது. 2015-ல் சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோல்வியடையும் நிலையிலிருந்த மும்பை அணியைத் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடித்துக் காப்பாற்றியதுதான் பாண்ட்யாவின் அதிரடி அறிமுகத்துக்குப் பிள்ளையார் சுழி. வேகப்பந்து வீச்சிலும் ஜொலிக்கவே, கடந்த ஆண்டுதான் இந்திய அணியில் ஆல்ரவுண்டராக அடியெடுத்து வைத்தார் பாண்ட்யா. ஓராண்டுக்குள்ளாகவே அடுத்த கபில்தேவாக பாண்ட்யா உடுவெடுப்பாரா என்று சொல்லுமளவுக்குப் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் மெருகேறியிருக்கிறார்.

அநாயாசமாக சிக்ஸர்களைப் பறக்கவிடுவதென்பது ஆல்ரவுண்டர்களுக்கே உரிய தனி குணம். அது பாண்ட்யாவுக்கும் வாய்த்திருக்கிறது. அதுவும் ‘பவர்ஃபுல்’லாக சிக்ஸர்களை விளாசுவதைப் பார்க்கும்போது, பல ஆல்ரவுண்டர்களை அவர் நினைவுபடுத்துகிறார். ஐ.சி.சி. டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் ஆடிய ருத்ர தாண்டவம் அணிக்கு வெற்றியைத் தேடி தராவிட்டாலும், ஆல்ரவுண்டர் அந்தஸ்தைக் கூட்டியது. ஆல்ரவுண்டரின் தேவையை உணர்ந்துள்ள இந்திய அணி ஒரு நாள், டி 20 போட்டிகளில் மட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டியிலும் அவரை இப்போது களமிறக்கியிருக்கிறது.

_06CHDKN_CRICKETER_HARDIK_PANDYA_AND_ODIright

மூன்று வடிவங்களிலுமே அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100-க்கு மேல்தான். அதிரடியாக விளாசுவது, அதையும் சிக்ஸர்களாகப் பறக்கவிடுவதுதான் பாண்ட்யாவின் ஸ்டைல். அதே நேரம் விக்கெட்டுகளை வீழ்த்தவும் செய்கிறார். ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்புவரை 6-வது வீரராகக் களமிறங்கிய பாண்ட்யா, இப்போது 4-வது வீரராக முன்னேற்றமும் கண்டிருக்கிறார். அந்த இடத்திலும் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபிக்கவும் தவறவில்லை.

ஆல்ரவுண்டர் ஆவாரா?

ஒரு சின்ன ஒப்பீடு. இந்திய கிரிக்கெட்டில் பாண்ட்யா அடுத்த கபில்தேவாக உருவெடுக்கலாம் என்பதைக் காட்டுகிறது. கபில்தேவ் அறிமுகமான முதல் 26 ஒரு நாள் போட்டிகளில் 472 ரன்களையும் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். ஹர்திக் பாண்ட்யாவோ 26 போட்டிகளில் 530 ரன்களையும் 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். இதில் 10 போட்டிகளில் அவர் பேட்டிங் செய்யக் களமிறங்கவே இல்லை. ஆல்ரவுண்டராக கபிலைவிடச் சிறப்பாகவே செயல்பட்டிருப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் 131 டெஸ்ட் போட்டிகள், 225 ஒரு நாள் போட்டிகள், 275 முதல் தரப் போட்டிகள் என கபில்தேவின் ஆல்ரவுண்டர் அனுபவம் அதிகம். 3 டெஸ்ட் போட்டிகள், 26 ஒரு நாள் போட்டிகள், வெறும் 20 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள பாண்ட்யாவின் ஆல்ரவுண்டர் பயண அனுபவம் மிகவும் குறைவுதான்.

கபில்தேவைப் போல உருவாக இன்னும் சில ஆண்டுகளும் பல கிரிக்கெட் போட்டிகளும் பாண்ட்யாவுக்குத் தேவை. அதுவரை அவருடைய பவர்ஃபுல்லான சிக்ஸர்களையும் பவுலிங்கையும் பார்த்து ரசித்துக்கொண்டிருப்போம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x