

கடலூர்: சேலத்தைச் சேர்ந்தவர் பொன் சாம்பசிவம். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுகாதாரத் துறையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர், சிறுவயதிலிருந்தே சமூக சேவைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
ரத்த தானம், கண் தானம்மற்றும் மருத்துவ முகாம்களில் ஆர்வத்துடன் பங்கேற்கும் பொன் சாம்பசிவம், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட சிறுசிறு சேவை நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். தன் சேவையின் ஒரு படியாக கடந்த 16 ஆண்டுகளாக நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு சுவரில் விழிப்புணர்வு வாசகங்களை தொடர்ந்து எழுதி வருகிறார்.
கல்வி, மருத்துவம், சுகாதாரம், அறிவியல், குழந்தைகள் நலம், நடை பயிற்சி, மாணவ, மாணவிகள் கல்லூரியில் சேர்வது, மது, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துகள்,
ரத்ததானம், கண் தானம், தீயணைப்பு, வீட்டு பாதுகாப்பு, எய்ட்ஸ் மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் மக்களைச் சென்றடைய வேண்டிய அரசு சார் அறிவிப்புகளை இப்படி சுவரில் எழுதி மக்களுக்கு தெரியப்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும், அந்த இடத்தை தூய் மைப்படுத்தி, புது வண்ணமிட்டு இந்தப் பணியை உற்சமாக செய்து வருகிறார். இவரின் இந்தச் சேவையை பாராட்டி, சில அமைப்புகள் இவருக்கு ‘மக்கள் சேவகர்’ என்ற பட்டத்தை தந்துள் ளது. இவரின் சேவையை மெச்சி, இந்த சுவரை இந்த விழிப்புணர்வு பணிக்காக பயன்படுத்திக் கொள்ள என்எல்சி நிர்வாகம் வாய் வழி அனுமதியை வழங்கியுள்ளது.
இது பற்றி பொன்சாம் பசிவத் திடம் கேட்டால், “நமக்கு தெரிஞ்ச நல்ல விஷயத்த நாலு பேருக்கு தெரியப்படுத்தணும்; அதுக்குத்தான் இது” என்கிறார்.