Published : 11 Jun 2023 03:26 PM
Last Updated : 11 Jun 2023 03:26 PM
கடலூர்: கடலூரைச் சேர்ந்தவர் சுபாஷ். மரைன் என்ஜினீயர். இவர், ‘கார்கோ ஷிப்’ எனப்படும் சரக்கு கப்பலில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். பணி நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இவரது மனைவி சுப. இவர், ‘கப்பல் போல் வீடு கட்ட வேண்டும்’ என ஆசையாக கூறி வந்த நிலையில், கடலூர் வண்ணாரபாளையம் பகுதியில் 11 ஆயிரம் சதுர அடியில் ஒரு இடத்தை வாங்கி, அதில் 4 ஆயிரம் சதுர அடியில் கப்பல் போன்ற வடிவமைப்பில் வீட்டை கட்டத் தொடங்கினார் சுபாஷ்.
கடந்த 2 ஆண்டுகளாக வீடு கட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது அந்த பணிகள் முடிவடைந்து நேற்று முன்தினம் புதுமனை புகுவிழா நடைபெற்றது. கப்பல் போன்று தோற்றம் உள்ள இந்த வீட்டினைச் சுற்றி தண்ணீர் நிற்கும் விதமாக வழிவகை செய்துள்ளார். வீட்டிற்குள் செல்ல கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகள் அமைத்து அதன் வழியாக 6 அறைகளை கட்டி, இந்த வீட்டினை பிரம்மாண்டப்படுத்தி உள்ளார். மேலும் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என தனித்தனியாக அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நன்கு காற்றோட்டம் வீட்டிற்குள் வரும் விதமாகவும் இந்த கப்பல் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கப்பல் கேப்டன் அமர்ந்து கப்பலை செலுத்தும் விதமாக இருப்பது போன்று ஒரு அறை அமைத்து, அதன் வழியாக வெளிப்புறத்தை பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்தவீட்டை பார்க்கும் போது ஒரு கப்பல் தண்ணீரில் செல்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும் மின்னொளிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுமனை புகுவிழா நாளன்று, ‘எஸ்.4 குடும்பம் உங்களை வரவேற்கிறது’ என சுபாஷ் பல்வேறு இடங்களிலும் பேனர்களை வைத்தார். “எங்கள் குடும்பத்தில் என் மனைவி, நான் மற்றும் எங்கள் இரு மகள்கள் என அனைவரின் முதல் எழுத்து எஸ்; எனவே நாங்கள் எஸ்.4 குடும்பம் என்று எங்களை அழைத்துக் கொள்கிறோம்” என்கிறார் சுபாஷ்.
சுபாஷ் மனைவி சுப கூறுகையில், “எனக்கு திருமணமான உடன் என்னைக் கப்பலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறியபோது, மலேசியா அழைத்துச் சென்று சாதாரண ஒரு கப்பலை காட்டினார். எனது கணவர் பணிபுரியும் கப்பலுக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு குறைவு எனக் கூறிய நிலையில், கப்பல் போல உனக்கு ஒரு வீடே கட்டி தருகிறேன் என்றார். இப்போது அதை சாத்தியாமாக்கியிருக்கிறார்” என்று கூறினார். வித்தியாசமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டை சுற்று வட்டாரத்தினர் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT