

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அன்றாடம் வேலையை எதிர்நோக்கும் தொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
தினசரி கூலிகளாக வேலைக்கு செல்வதை தாங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இவர்கள் தினமும் வேலை தேடி பல்வேறு இடங்களுக்கு அலைவதை தவிர்க்க தொழிலாளர்கள் சேர்ந்து திறந்த வெளி வேலை வாய்ப்பு சந்தையை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பல தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் உள்ள காட்டாஸ்பத்திரி பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் ஆண்கள், பெண்கள் என பலர் கையில் மதிய உணவுப் பையுடன் காலை 8 மணி முதல் காத்திருக்கின்றனர். இவர்களை கடந்து செல்லும் பலர் பேருந்துக்காகக் காத்திருக்கின்றனர் என நினைத்து செல்வதுண்டு.
ஆனால், அவர்கள் தங்கள் வாழ்வா தாரத்துக்கு காத்திருக்கின்றனர் என்பது சிலருக்குத்தான் தெரியும். திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கட்டுமானப் பணிக்கு தேவையான தொழிலாளர்களை அழைத்துச் செல்ல கட்டுமான ஒப்பந்ததாரர்கள் பலர் காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் வருகின்றனர்.
தங்களுக்கு தேவையான கொத்தனார், நிமிர்ந்தாள், சித்தாள் என தேவைக்கேற்ப தொழிலாளர்களை அழைத்துச் செல்கின்றனர். இப்படி தினமும் நூற்றுக்கணக்கானோர் வேலை பெறுகின்றனர்.
இது குறித்து திண்டுக்கல் அருகேயுள்ள குட்டிய பட்டியைச் சேர்ந்த கருப்பையா கூறியதாவது: கிராமங்களில் விவசாயம் பொய்த்து விட்டதால் விவசாய வேலை கிடைப்பதில்லை. ஆனால் திண்டுக்கல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடப்பதால் தினமும் வேலை கிடைக்கிறது. இதனால் பெண்கள், ஆண்கள் என அதிகம் பேர் இங்கு வந்து கூடுகின்றனர். வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவோர் நாங்கள் கூடும் இடத்துக்கே வந்து அழைத்துச் செல்கின்றனர்.
தூரமான இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் அவர்களே வாகனத்தில் அழைத்துச்சென்று மாலையில் இங்கு வந்து இறக்கிவிட்டு விடுவர். காலை 8 மணிக்கு 300-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் காட்டாஸ்பத்திரி பேருந்து நிலையம் அருகே கூடுகிறோம். இதில் 90 சதவீதம் பேருக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும்.
சிலர் காலை 11 மணி வரை காத்திருந்தும் வேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பு வதுண்டு. நான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வந்து தினமும் வேலை பெற்று வருகிறேன். கட்டிடத் தொழில் மட்டுமின்றி வேறு வேலைகளுக்கும் தொழிலாளர்கள் செல்வர். நம்பிக்கையுடன் வரும் தொழிலாளர்களை இந்த திறந்தவெளி வேலைவாய்ப்பு சந்தை கைவிடு வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.