

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்மர் கோயிலில் விஜய நகரக் காலத்தைச் சேர்ந்த கல் வெட்டு கண்டறியப்பட்டுள்ளது என அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில், மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், புதிதாக கட்டப்பட்டுள்ள வாகன வைப்பு அறையில், விஜய நகர காலத்தைச் சேர்ந்த சிறிய கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது: இக்கோயிலில் உள்ள கல்வெட்டு விஜய நகர காலத்தைச் சேர்ந்தது. இதில், ‘ஹரிஹரன் குமாரன் இம்மடி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கல்வெட்டு 2-ம் ஹரிஹரனின் மகனான இரண்டாம் புக்கராயனை குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், அப்பகுதி சேதமடைந்துள்ளது.
எனவே, இக்கோயில் விஜய நகர காலத்தில் கட்டப்பட்டது என்பது தெரிய வருகிறது. மேலும், இங்குள்ள சுவறில் தவழும் கிருஷ்ணர், காலிய கிருஷ்ணர் மற்றும் குழல் ஊதும் கிருஷ்ணர் ஆகிய சிற்பங்களும் உள்ளன. இவை விஜய நகர காலத்தைச் சேர்ந்தவையாகும். இதேபோல, இக்கோயிலில் பழைய தேர் உள்ளது.
இத்தேர் 1898-ல் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு, வாடமங்கலம் ஜாகிர்தார் தர்மாச்சாரி என்பவர் தானம் அளித்ததைத் தெரிவிக்கும் வகையில் பித்தளை கவசத்தின் கீழ் பட்டி ஒன்றில் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிற்பி மணியகாரர் வெங்கடாசாரியின் வளர்ப்பு மகன் வெங்கடாசாரி என்பவர் இத்தேரை வடிவமைத்துள்ளார். இத்தேரும் 100 ஆண்டு பழமையானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.