மதுரை | மேலூர் அருகே பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்

தாம் பணியாற்றும் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 10 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் மா.செள.சங்கீதாவிடம் வழங்கிய  உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ந.அருணாசலம்.
தாம் பணியாற்றும் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 10 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் மா.செள.சங்கீதாவிடம் வழங்கிய  உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ந.அருணாசலம்.
Updated on
1 min read

மதுரை: கிராமப்புற பள்ளி மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை வசதிகள் செய்வதற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.10லட்சம் வழங்கியுள்ளார் உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ந.அருணாசலம்.

மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்டது உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. 836 மாணவ, மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் 31 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5.5 ஏக்கர் பரப்பளவுடைய இப்பள்ளியானது, மேலூர் கல்வி மாவட்டத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 2வது பள்ளியாக திகழ்கிறது. எனினும், இங்கு போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டும், தாம் பணியாற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதியும் தலைமையாசிரியர் ந.அருணாசலம், ரூ. 10 லட்சம் சொந்த நிதியை வழங்க எண்ணினார். அதனையொட்டி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மா.செள.சங்கீதாவிடம் காசோலையாக வழங்கினார். தலைமையாசிரியரின் செயலை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ந.அருணாச்சலம் கூறியதாவது: "உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021ம் ஆண்டு தலைமையாசிரியராக சேர்ந்தேன். மேலூர் கல்வி மாவட்டத்தில் அதிக மாணவர்கள் எண்ணிக்கையுடைய 2வது பள்ளி. இங்கு கடந்தாண்டு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எழுதுவதற்காக தேர்வு மையம் ஏற்படுத்தினோம். தற்போது பள்ளி மாணவர்கள் நலன் கருதியும், சமுதாய நலன் கருதியும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் பெற்று அதனை நமக்கு நாமே திட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் காசோலையாக வழங்கினேன். நமக்கு நாமே திட்டத்தில் அரசும் பங்களிப்பு செய்து நிதி ஒதுக்கும். விரைவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகள் தொடங்கும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in