Last Updated : 05 Jun, 2023 06:14 PM

 

Published : 05 Jun 2023 06:14 PM
Last Updated : 05 Jun 2023 06:14 PM

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதல் கடனுதவி: மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு விடை கொடுத்த கள்ளக்குறிச்சி!

சோமாண்டார்குடி ஊராட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்.

கள்ளக்குறிச்சி: கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின் கிராமப்புறங்களில் மக்களின் அன்றாட வருவாய் குறைந்த நிலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மைக்ரோ பைனான்ஸ் எனும் நுண்கடன் நிறுவனங்கள் கிராமப்புற பெண்களை குறி வைத்து, கூடுதல் வட்டிக்கு கடனுதவி வழங்கினர். நாளடைவில் கொடுத்த கடனை திரும்ப வசூலிக்கும்போது, எதிர்பாராத தருணங்களில் ஒரு சில தவணைகளை செலுத்த தவறும்போது, கடனை வசூலிப்பவர்கள் கடனாளிகளை அணுகும் விதம் மிகவும் கேவலமானது.

இதனால் பலர் மனுமுடைந்து தற்கொலை செய்து கொள்வது, காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு மனுக்களோடு அலை யும் நிலை உருவானது. இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆட்சியர் ஷ்ரவன்குமார், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜனுடன் ஆலோசனை நடத்தி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவியை விரிவுபடுத்த உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 2022-23-ம் ஆண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடனுதவி இலக்கு ரூ.500 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மகளிர் திட்ட அலுவலர்களின் செயல்பாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் ரூ.506 கோடி கடனுதவி வழங்கி மாநில அளவிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சுந்தரராஜன் கூறுகையில், “மாவட்டத்தில் ஒரு குழுவுக்கு 15 முதல் 20 நபர்கள் என்ற வகையில் 8,500 குழுக்கள் உள்ளன. இதன்மூலம் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

குழு உறுப்பினர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்கள் முறையாக கடனையும் திருப்பிச் செலுத்தி வருகின்றனர். கடந்த வருடம் இலக்கைக் காட்டிலும் கூடுதல் கடனுதவி வழங்கியதன் மூலம் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறோம்.

இதன்மூலம் கிராமப்புறங்களில் நுண்கடன் தாரர்களின் வலையில் இருந்து கிராமப்புற மக்கள் மீண்டுள்ளனர்” என்றார்.
கள்ளக்குறிச்சி வட்டார இயக்க மேலாளர் சதீஷ்குமார் கூறுகையில், “ஒவ்வொரு குழுவுக்கும் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடனுதவி பெற்றுக் கொடுத்துள்ளோம். தனிநபருக்கு சராசரியாக ரூ.1 லட்சம் வரை குறைந்த வட்டியில் வழங்கப்படுவதால், அவர்களும் குறித்த காலத்திற்குள் பணத்தை திரும்ப செலுத்தி விடுகின்றனர்.

இதனால் 90 சதவீதம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கிராமப்புறங்களை விட்டு வெளியேறியுள்ளன. நடப்பு ஆண்டிற்கு கடன் இலக்கு ரூ.641 கோடியாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்த இலக்கையும் எட்டி மாநில அளவிலான முதலிடத்தை இந்த வருடமும் தக்க வைப்போம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x