

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி குறித்த சுவாரஸ்ய நிஜக்கதை ஒன்றை சமையல் கலைஞர் (செஃப்) சுரேஷ் பிள்ளை என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற காரணத்தினால் உலகமே இந்திய கிரிக்கெட்டின் லெஜெண்டை கொண்டாடி வருகிறது. ஆனால், நானோ ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு உணவு சமைத்து, பரிமாறிய அந்த தருணத்தை எண்ணி பிரமித்து நிற்கிறேன்.
இது 2018-ல் அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி திருவனந்தபுரத்தில் விளையாடியது. இந்திய அணி கோவளத்தில் (கேரளா) லீலா விடுதியில் தங்கினர். நானும் அங்கு தான் வேலை செய்து வந்தேன். இந்திய அணியினர் பேருந்தில் இருந்து இறங்கிய அந்த தருணத்தில் இருந்தே எனது கண்கள் அந்த ஒருவரை தான் தேடிக் கொண்டிருந்தது. எங்கள் எல்லோரையும் தனது ட்ரேட்மார்க் புன்னகையை கொடுத்தபடி அவரும் கடந்து சென்றார். அப்போது நான் அப்படியே உறைந்து நின்றேன்.
சிறிது நேர ஓய்வுக்கு பிறகு இரவு 7 மணி அளவில் வீரர்கள் அனைவரும் இரவு உணவுக்கான ஆர்டரை கொடுத்தனர். அனைத்தும் 9.30 மணி அளவில் நிறைவு பெற்றது. ஆனால், நான் யாருக்காக காத்திருந்தேனோ, அவரது அழைப்பு 10 மணி அளவில் தான் வந்தது. ‘செஃப் உங்களை தோனி சார், அவரது அறைக்கு வர சொல்லி உள்ளார்’ என அதில் தெரிவிக்கப்பட்டது.
அதுவரை செய்த பணிகள் அனைத்தையும் அப்படியே போட்டது போட்டபடி போட்டுவிட்டு 3-வது மாடியில் உள்ள அவரது அறைக்கு படி வழியே சென்றேன். லிஃப்ட் வரும் வரை காத்திருக்க விரும்பவில்லை. இருந்தும் அவரது அறையை நெருங்கியதும் நானே என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். கதவை தட்டினேன்..
‘ஹை செஃப். இரவு உணவுக்கு என்ன உள்ளது?’ என ஹிந்தி மற்றும் தமிழில் தோனி கேட்டார். நான் மீன்கள் உட்பட கடல் வாழ் உணவு குறித்து அடுக்கினேன்.
‘எனக்கு அலர்ஜி. அது எனக்கு சரி வராது. சிக்கன், சாதம், அப்புறம் ரசம் (தொண்டை கொஞ்சம் கரகரப்பாக உள்ளது) வேண்டும்’ என்றார். ‘பூண்டு ரசம் கிடைக்குமா?’ என தமிழில் கேட்டார்.
அடுத்த 20 நிமிடங்களில் அவர் தங்கியிருந்த அறை எண் 302-க்கு செட்டிநாடு சிக்கன், பாஸ்மதி அரிசி சாதம், பொறித்த அப்பளம், ரசத்தை அவருக்கு பரிமாறினேன்.
மறுநாள் காலை அவர் ஜிம் செல்லும் போது ‘உணவு அருமையாக இருந்தது’ என்றார். நான் அப்படியே காற்றில் பறப்பது போல உணர்ந்தேன். என்னை கவர்ந்த நாயகனுக்கு நான்கு நாட்கள் உணவு பரிமாறும் பாக்கியம் பெற்றேன். அது எனது சமையல் கலை சார்ந்த தொழில் வாழ்க்கையின் ஹைலைட் என சொல்வேன்.
வாழ்த்துகள் தல. உங்களுக்கு சமைத்து கொடுத்த ஆவலுடன் காத்துள்ளேன்” என செஃப் சுரேஷ் பிள்ளை தெரிவித்துள்ளார்.