

சண்டிகர்: பஞ்சாபில் சில இளைஞர்கள் சைலாசின் மயக்க மருந்தை, போதைப் பொருளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றை உட்கொள்ளும் இளைஞர்கள் தங்களை மறந்து பொது இடங்களில் அப்படியே உறைந்து நிற்கின்றனர். திரைப்படங்களில் வரும் ஜாம்பி கதாபாத்திரம் போன்று செயல்படுவதால் இவர்கள் ஜாம்பிகள் என்று அழைக்கப்படுகின்றனர். பஞ்சாபைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்பஜன் சிங் சமூக வலைதளத்தில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் சீக்கிய தலைப்பாகை அணிந்த இரு இளைஞர்கள் சாலையில் தன்னிலை மறந்து அப்படியே உறைந்து நிற்கின்றனர். பஞ்சாப் மாநில அரசு, பஞ்சாபையும் இளைஞர்களையும் சீரழித்து வருகிறது. ஆட்சியாளர்கள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் கேபினட் அமைச்சர் பல்ஜித் கவுர் வெளியிட்ட பதிவில், “ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவை, பஞ்சாப் என்று ஹர்பஜன் சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
பஞ்சாபின் கவுரவத்தை சீர்குலைப்பதே பாஜகவின் பிரதான அரசியல்" என்று குற்றம்சாட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து ஹர்பஜன் சிங் மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
அதில் 5 இளைஞர்கள், ஓர் இளம்பெண் போதை மருந்தால் ஜாம்பிகள் போன்று உறைந்து நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன, “இந்த வீடியோக்களும் ராஜஸ்தானைச் சேர்ந்ததா?’’ என்று அவர் கேட்டுள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, “பாஜக- சிரோமணி அகாலிதளம் ஆட்சியின்போதே பஞ்சாபில் போதைக் கலாச்சாரம் பரவியது. ஆம் ஆத்மி அரசு போதைப் பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஜக ஆட்சி நடத்தும் குஜராத்தில் இருந்தே பஞ்சாபுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதை் குஜராத் தடுக்க வேண்டும்" என்றார்.