

ஸ்ரீதர் வேம்பு
புதுடெல்லி: வெளி நாடுகளில் குடியேறிய இந்தியர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: 37 ஆண்டுக்கு முன்பு நான் செய்ததைப் போலவே, நீங்களும் வெறும் கையுடனும், பாரதத்தின் சிறந்த கல்வி மற்றும் கலாச்சாரப் பின்புலத்துடனும் அமெரிக்கா சென்றீர்கள்.
அங்கு பெரும் வெற்றியை ஈட்டினீர்கள். நமக்கு வாழ்வளித்த அமெரிக்காவுக்கு நாம் என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இருப்பினும், இன்று ஒரு குறிப்பிட்ட சதவீத அமெரிக்கர்கள், இந்தியர்கள் தங்களது வேலை வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதாகக் கருதுகின்றனர். நமது வெற்றி நேர்மையற்ற முறையில் ஈட்டப்பட்டது என அவர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள வலதுசாரி மற்றும் இடது சாரி மோதலில் நீங்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கிறீர்கள். இன்றைய உலகில் ஒரு நாட்டின் வலிமையும் பாதுகாப்பும் அதன் தொழில்நுட்பத் திறனைப் பொறுத்தே அமைகிறது. இந்தியாவிடம் போதிய அறிவுத்திறன் இருந்தும், நாம் அதை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டோம்.
நமது பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவைப்படுகிறது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல, நீங்கள் ஈட்டிய தொழில்நுட்ப அனுபவம் வழிகாட்டியாக அமையும். இதனை ஒரு லட்சியப் பயணமாக கருதி தாயகம் திரும்புங்கள். இவ்வாறு வேம்பு பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளப் பயனர் ஒருவர், "அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நிறையப் பேர் தாயகம் திரும்புவார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "அரசு இன்னும் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலையும், வரிச் சலுகைகளையும் வழங்கினால் மட்டுமே மக்கள் நாடு திரும்புவது சாத்தியமாகும்" என்று கூறியுள்ளார்.