

கொல்கத்தா: கடந்த 2011-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 184 தொகுதிகளைக் கைப்பற்றி முதல்முறையாக ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரஸ் 40 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் 40 தொகுதிகள், இதர கட்சிகள் 28 தொகுதிகளைக் கைப்பற்றின. பாஜகவுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.
கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 211 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அப்போது காங்கிரஸுக்கு 44, இடதுசாரி கட்சிகளுக்கு 26, இதர கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைத்தன. பாஜக 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 18 தொகுதிகளைக் கைப்பற்றி ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக 77 பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 207 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றிருக்கிறது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. காங்கிரஸுக்கு 2, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்துள்ளது. முதல்முறையாக மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது.