

புது டெல்லி: “நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையம், மோடியின் தேர்தல் ஆணையம் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில், “ வாக்குத் திருட்டு குறித்த எனது குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடுங்கும் கைகளுடன் தேர்தல் ஆணையத்துக்காக அவர் விளக்கமளித்தார். எனது செய்தியாளர் சந்திப்பில் விவாதிக்க வருமாறு அவருக்கு சவால் விடுத்தேன். யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை நாட்டுக்குக் காட்டுவோம். அவரது நடுங்கும் கைகளைப் பார்த்தீர்களா?. அவர் ஏன் நடுங்கினார் என்று நான் சொல்லட்டுமா?. ஏனென்றால், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே தைரியமாக இருக்கிறார்கள்.
இந்த பெயர்களை நினைவில் கொள்ளுங்கள்: சுக்வீர் சந்து, ஞானேஷ் குமார், விவேக் ஜோஷி. தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறது. நரேந்திர மோடி அவர்களுக்காக சட்டத்தை மாற்றி, தேர்தல் ஆணையர் எதையும் செய்யலாம், ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையம், மோடியின் தேர்தல் ஆணையம் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தச் சட்டத்தை மாற்றி, உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம். ஏனென்றால் நாங்கள் உண்மைக்காகப் போராடுகிறோம்.
”உலகம் உண்மையை பார்ப்பதில்லை, அது அதிகாரத்தையே பார்க்கிறது” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களே மதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் மோகன் பாகவத்தின் சிந்தனை. இந்த சித்தாந்தம் ஆர்எஸ்எஸ்க்கு சொந்தமானது.
நமது சித்தாந்தம், இந்தியாவின் சித்தாந்தம். உலகின் ஒவ்வொரு மதத்தின் சித்தாந்தமும் உண்மைதான் மிக முக்கியமானது என்று கூறுகிறது. ஆனால், உண்மை அர்த்தமற்றது, அதிகாரமே முக்கியம் என்கிறார் மோகன் பாகவத்.
இந்த மேடையிலிருந்து நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், நீங்கள் பார்ப்பீர்கள், உண்மையை நிலைநிறுத்தி, உண்மைக்குப் பின்னால் நின்று, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவோம்.
அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதால் அவர்கள் 'வாக்குத் திருட்டில்' ஈடுபடுகிறார்கள். பிஹார் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு பாஜக ரூ.10,000 பணத்தை அனுப்பியது. ஆனால் தேர்தல் ஆணையம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில், தேர்தல் ஆணையம் பாஜக அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறது” என்று கூறினார்