

புதுடெல்லி: யமுனா விரைவு சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் அதிகாலையில் சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் பார்வைக்கு தெரியாத நிலை உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவு சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து, கார்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் சில பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து மதுரா மாவட்ட ஆட்சியர் சந்திர பிரகாஷ் சிங் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த 60 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்கின்றன. இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “யமுனா விரைவு சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். இதுபோல, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆதித்யநாத்தும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.