

எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்
கொல்கத்தா: வங்கதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். இஸ்லாமியத்துக்கு எதிராக இவர் தொடர்ந்து எழுதி வந்ததால், வங்கதேசத்தில் இவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்காவில் சில ஆண்டுகள் வசித்தார். இவர் இந்தியாவில் தற்காலிக தங்கும் அனுமதி பெற்று மேற்கு வங்கம் கொல்கத்தாவுக்கு கடந்த 2004-ம் ஆண்டு வந்தார்.
ஆனால் இவர் இஸ்லாம் பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்ததால் இவருக்கு மேற்குவங்கத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.
அப்போதைய மார்க்சிஸ்ட் தலைமையிலான மேற்குவங்க அரசு தஸ்லிமாவை வலுக்கட்டாயமாக கொல்கத்தாவில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு வெளியேற்றியது. இதனால் இவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கொல்கத்தாவின் ரவீந்திர சதனில், தீவிரவாதத்துக்கு எதிரான நிகழ்ச்சி ஒன்றில் தஸ்லிமா நஸ்ரின் இன்று கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மற்றும் பிரபல எழுத்தாளர் சிர்ஷேந்து முகபாத்யாயா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். 19 ஆண்டுகளுக்குப் பிறகு தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தா வருவது குறிப்பிடத்தக்கது.