

புதுடெல்லி: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசியதாவது:
தீவிரவாதம், பிரிவினைவாதம், இனவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்துப் போரிட எஸ்சிஓ அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகமாகி விட்டன.
தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் நாம் அதை வேரறுக்கவேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக நாம் சகிப்புத்தன்மையைக் காட்டக்கூடாது.
தீவிரவாதத்தின் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை நாம் காட்டுவது கட்டாயமாகும். இதிலிருந்து எந்த நாடும் விலகிச் செல்லவும் முடியாது. திரும்பிப் பார்க்கவும் முடியாது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, தீவிரவாதத்துக்கு எதிராக எங்களது மக்களைப் பாதுகாக்கும் உரிமை உண்டு.
தீவிரவாதத்தை வேரறுக்க ஒன்றுபட்டு செயல்படுவோம். மாறி வரும் உலகளாவிய நிலப்பரப்புக்கு ஏற்ப ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (எஸ்சிஓ) நாம் மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.