கர்நாடகாவில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டால் ஆச்சரியப்பட மாட்டேன்: பி.ஒய். விஜயேந்திரா

பி.ஒய். விஜயேந்திரா

பி.ஒய். விஜயேந்திரா

Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் செங்குத்தாக பிளவுபட்டால் ஆச்சரியப்பட மாட்டேன் என்று அம்மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 2023 மே மாதம் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சித்தராமையா முதல்வரானார். துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றார். அப்போதே, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவகுமாரும் முதல்வர்களாக இருப்பது என ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, முதல் இரண்டரை ஆண்டு காலம் கடந்த 20ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அம்மாநிலத்தில் முதல்வர் மாற்றம் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் உரிய முடிவை எடுக்கும் என கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, “முதல்வர் சித்தராமையாவுக்கும் துணை முதல்வர் டி.கே. சிகுமாருக்கும் இடையே அதிகார மோதல் நிகழ்ந்து வருகிறது. 2023 மே மாதம் கர்நாடக மக்கள் காங்கிரஸை ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள். மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், மாநிலத்தில் வளர்ச்சி இல்லாததால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் மக்கள் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர். காங்கிரஸுக்குள் நடக்கும் உட்கட்சி சண்டை காரணமாக நிர்வாகம் முடங்கியுள்ளது.

காங்கிரஸ் அரசாங்கத்துக்குள் நடக்கும் சண்டைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாநிலம் பாதிக்கப்பட்டு வருவதால், குளிர்கால கூட்டத் தொடர் கூடுவதற்கு முன்பாக சித்தராமையாவும் டி.கே. சிவகுமாரும் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று நான் கூறினேன். ஏனெனில், விவசாயிகள் இழப்பீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டி.கே. சிவகுமார் ஆக்ரோஷமாகப் பேசுகிறார். காங்கிரஸுக்குள் செங்குத்தாக பிளவு ஏற்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in