கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி - சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்

கேரள முதல்வர் வி.டி.சுதீசன்

கேரள முதல்வர் வி.டி.சுதீசன்

Updated on
2 min read

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி என்றும், கடன் அல்லாத நிலுவை பொறுப்புகள் ரூ.48,733 கோடி என்றும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. முதல்வராக வி.டி. சதீசன் பொறுப்பேற்றார்.

முதல்வரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார். அதன்படி, நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கேரள சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள்: கேரள மாநிலத்தின் மொத்த பொதுக்கடன் ரூ.5.07 லட்சம் கோடி. மாநிலத்தின் வருவாயில் 77% சம்பளம், ஓய்வூதியம், வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கே செலவிடப்படுகிறது. இதனால், வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி மிகவும் குறைந்துவிட்டது. மாநிலம் மிக அதிக அளவிலான நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக மூலதனச் செலவினங்கள் நாட்டின் மிகக் குறைந்த அளவாகவே நீடிக்கிறது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம் மட்டுமே. அதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரண (DR) நிலுவைகள் உட்பட மொத்தம் ரூ.48,733 கோடி அளவுக்கு நிலுவை பொறுப்புகளை புதிய அரசு ஏற்றுள்ளது.

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் ரூ.21,000 கோடி அளவிலான நிலுவைக் கடன் பொறுப்புகளைக் கொண்டுள்ளது. கேரள பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.78,851 கோடியாக உயர்ந்துள்ளது. கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், கேரள குடிநீர் வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களே இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

எஸ்சி, எஸ்டி, பிசி, சிறபான்மையினர் ஆகியோரின் நலன்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது. மேலும், எதிர்பார்த்ததைவிட குறைவாகவே மாநில வரி வருவாய்கள் ஈட்டப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியுதவியும் குறைந்துள்ளது. மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு இவை முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.

சவால்கள் அதிகரித்துள்ள போதிலும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பது, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது ஆகிய துறைகளில் தொடர் முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் கேரளத்தின் நிதி சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். இவ்வாறு அந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய முதல்வர் வி.டி. சதீசன், “மாநிலத்தின் நிதிநிலை குறித்த உண்யைான நிலையை அறிந்துகொள்ளும் உரிமை கேரள மக்களுக்கு உண்டு. இந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஏற்கனவே பொதுவெளியில் கிடைக்கக்கூடியவையே. இந்த வெள்ளை அறிக்கையை தயாரித்தது நிதித்துறையே. கடந்த காலங்களில் வெள்ளை அறிக்கைகள், அரசியல் ஆவணங்களாகவே இருந்தன. ஆனால், இந்த வெள்ளை அறிக்கை அப்படி அல்ல. நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம், கேரளத்தின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான ஒரு வரைபடமாகச் செயல்படும்” என தெரிவித்தார்.

அதேநேரத்தில், இது ஒரு அரசியல் ஆவணமே என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். “இந்த ஆவணம் ஒரு அரசியல் ஆவணமாகவே உள்ளது. இங்குள்ள முக்கிய பிரச்சினை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது பற்றியதல்ல. மாறாக, இந்த வெள்ளை அறிக்கையானது முறையான நிறுவன வழிமுறைகளின் வாயிலாக தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதே ஆகும். ஆனால், இதில் அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை” என பினராயி விஜயன் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கேரள முதல்வர் வி.டி.சுதீசன்</p></div>
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்” - முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in