

அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (ஐசிஏஆர்) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது கோதுமைப் பயிர் நல்ல நிலையில் உள்ளது. எந்த சேதமும் இல்லை. சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு மற்றும் சாதகமான பயிர்ச் சூழல் காரணமாக, நாட்டின் கோதுமை உற்பத்தி கடந்த ஆண்டின் சாதனையான 117.94 மில்லியன் டன்னை விட அதிகரித்து புதிய சாதனை படைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஐசிஏஆர் தலைமை இயக்குநர் எம்.எல்.ஜாட் கூறுகையில், ‘‘கோதுமை சாகுபடிப் பரப்பளவு 33 மில்லியன் ஹெக்டேரைக் கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி பயிரின் நிலை மிக நன்றாக உள்ளது. எனவே கோதுமை உற்பத்தி 120 மில்லியன் டன்னை எட்ட வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் மற்றும் முன்கூட்டியே விதைக்கப்பட்டதே இதற்கு காரணம்’’ என்றார்.
2025-26 ரபி பருவத்தில் ஜனவரி 2-ம் தேதி நிலவரப்படி, கோதுமை சாதனை அளவாக 33.41 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் பயிரிடப்பட்ட 32.80 மில்லியன் ஹெக்டேரை விட அதிகம் என்று வேளாண் அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.