‘மாண்பை இப்படிச் சிதைப்பதா?’ - நேஹா போராவுக்கு நெட்டிசன்கள் ஆதரவுக் குரல்

‘மாண்பை இப்படிச் சிதைப்பதா?’ - நேஹா போராவுக்கு நெட்டிசன்கள் ஆதரவுக் குரல்
Updated on: 
2 min read

புதுடெல்லி:  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதி​ராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடை​பெற்ற போராட்டத்​தில் கலந்துகொண்ட அகில இந்​திய மாணவர் சங்​கத்​தின் தலைவர் நேஹா போராவை இழிவுபடுத்தும் விதமான எக்ஸ் பதிவுகள், வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் பல்வேறு கணக்குகளிலும் நேஹாவை இழிவுபடுத்தும் பதிவுகள் மலிந்து கிடப்பதைக் காண முடிகிறது.

எக்ஸ் பதிவில் நேஹா போராவை இழிவுபடுத்தி பகிரப்பட்ட வீடியோவின் கீழ் நெட்டிசன் ஒருவர் “பெண்களின் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறோம், ஆனால் பெண்கள் ஏன் பாதுகாப்பாக இல்லை என்பதே பலருக்கும் தெரியவில்லை. நேஹாவை இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளவர், அவரது சகோதரியாக இருந்திருந்தால், அவரால் இந்த வீடியோவை பகிர்ந்திருக்க முடியுமா?” என்று காட்டமாக வினவியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.4) நேஹா போரா அவரது சகாக்களுடன் டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் சர்க்கிளில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கிப் புறப்பட்டார். ஆனால், அவரை டெல்லி அசோகா சாலையிலேயே தடுத்து நிறுத்தினர் போலீஸார். அப்போது அவர் போலீஸ் தடுப்புகளை ஏறிக் குதிக்க முயன்றார். ஆனால் அவரை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்தனர். பின்னர் அவர் நரேலா தொழிற்பேட்டை பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அடுத்த நாள் (திங்கள்கிழமை) நேஹா போரா போலீஸாருடன் போராடிய மற்றும் சக மாணவர்களுடன் இணைந்து போலீஸ் தடுப்பு வேலிகளைத் தாண்ட முயன்ற காட்சிகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டன. அதன் கீழ் கீழ்த்தரமான கருத்துகளும் இடம்பெற்றிருந்தன. சிலர் நேஹாவின் வீடியோவை எடிட் செய்தும் வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும், இதுபோன்ற வீடியோக்கள் நெட்டிசன்களிடமிருந்து கடுமையான கண்டனங்களைப் பெறத் தவறவில்லை.

“பெண்களை இழிவுபடுத்துவதை அவர்கள் லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. நேஹா போராவின் இடத்தில் உங்கள் தாய், சகோதரி அல்லது மகள் இருந்திருந்தால், இந்த வீடியோவை இன்னும் பதிவிடுவீர்களா அல்லது லைக் செய்வீர்களா? 7.1K லைக்ஸ் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இதுபோன்ற உள்ளடக்கத்தை லைக் செய்வதற்கு அல்லது பகிர்வதற்கு முன், நீங்கள் ஆதரிக்கும் விஷயத்தின் தாக்கத்தைப் பற்றி சிந்தியுங்கள்” என்று ஒரு எக்ஸ் பயனர், நேஹாவை இழிவுபடுத்திய வீடியோவுக்குக் கீழ் பதிவிட்டுள்ளார்.

வேண்டுமென்றே நேஹாவை அத்தனை மோசமான கோணங்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பியுள்ளனர். ஒரு பெண்ணின் மாண்பை அது சிதைக்கும் என்று தெரிந்தே செய்துள்ளனர் என்று நெட்டிசன்கள் தங்கள் கோபத்தை பதிவு செய்துள்ளனர்.

“போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பெண்ணின் புகைப்படம் / வீடியோவை இதுபோன்ற கோணத்தில் காட்டி, முழு போராட்டத்தையும் ஏன் அவமதிக்க முயற்சிக்கிறீர்கள்? விவாதிக்கப்பட வேண்டியது பிரச்சினை வேறு. அதைவிடுத்து ஒரு பெண்ணின் கண்ணியத்தை டிஆர்பி-க்காக காட்சிப் பொருளாக்குவதல்ல” என்று எக்ஸ் பதிவர் ஒருவர் வினவியுள்ளார்.

இத்தனை எதிர்ப்புகளுக்குப் பின்னரும் கூட, எக்ஸ் பதிவர்கள் சிலர் அந்த கருத்துகளையோ, வீடியோக்களையோ அகற்றத் தயாராக இல்லை.

மீண்டும் போராட்டம்:

இதற்கிடையில், வரும் சனிக்கிழமை டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் போராட்டத்தில் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இணையுமாறு நேஹா அழைப்பு விடுத்துள்ளார். போராட்டங்களை ஒடுக்க ஒட்டுமொத்த டெல்லி காவல் துறையும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் நேஹா கூறியிருக்கிறார்.

‘மாண்பை இப்படிச் சிதைப்பதா?’ - நேஹா போராவுக்கு நெட்டிசன்கள் ஆதரவுக் குரல்
“2047-க்குள் வளர்ந்த இந்தியாவை நிச்சயம் உருவாக்குவோம்” - பிரதமர் மோடி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in