

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பரூய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாஸ் மோண்டல். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனிமையான ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு ஆனந்த் சர்தார், திவாகர் சர்தார் என்ற இருவருடன் சேர்ந்து சிறுமியை பிரபாஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு சிறுமியை உயிருடன் ஒரு சாக்குப் பையில் திணித்து அருகில் உள்ள குளத்தில் வீசினார்.
உள்ளூர் மக்கள் பிரபாஸை அடையாளம் கண்டு போலீஸாரிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, சிறுமியின் உடல் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து மற்ற இரு குற்ற வாளிகளாக ஆனந்த் மற்றும் திவாகரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குற்றம் நிகழ்ந்த விதத்தை அறிந்து கொள்ளும் நடவடிக்கைக்காக பிரபாஸை சம்பவ இடத்துக்கு போலீஸார் நேற்று அதிகாலையில் அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு பிரபாஸ் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது நடந்த மோதலில் பிரபாஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு நிகழ்ந்த முதல் என்கவுன்ட்டர் சம்பவம் இதுவாகும்.
உடலை ஏற்க மறுப்பு
இந்நிலையில் பரூய்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பிரபாஸ் உடலை பெற்றுக்கொள்ள அவரது தாயார் மறுத்துவிட்டார். “எனது மகன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை கிடைத்துவிட்டது. அவன் உடலை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று போலீஸாரிடம் பிரபாஸின் தாயார் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.