அவசரநிலையை எதிர்த்து சிறை சென்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் - மே. வங்க முதல்வர் அறிவிப்பு

அவசரநிலையை எதிர்த்து சிறை சென்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் - மே. வங்க முதல்வர் அறிவிப்பு
Updated on
1 min read

கொல்கத்தா: அவசரநிலையை எதிர்த்து சிறை சென்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அவசர நிலை காலத்தில் ஜனநாயகத்தைக் காப்பதற்காக துணிச்சலாகப் போராடிய இந்த போராளிகள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேரிட்டது. புதிய மாநில அரசு இத்தகைய துணிச்சலான போராளிகளின் கொள்கைகளின் அடிப்படையிலேயே செயல்படுகிறது. அவசரநிலை காலத்தில் சிறையில் இருந்த 325 பேரை மேற்கு வங்க அரசு அடையாளம் கண்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25ம் தேதியை ஜனநாயக படுகொலை தினமாக அனுசரித்து வருகிறது. பாஜக ஆளும் பல மாநிலங்கள், அவசரநிலை காலத்தில் சிறை சென்றவர்களை கவுரவிக்கும் நோக்கில் விருதகளையும் ஓய்வூதியங்களையும் வழங்கி வருகின்றன.

மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கும் பாஜக, அம்மாநிலத்திலும் அவசரநிலைக் கால போராளிகளை கவுரவிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முன்னதாக, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 84ம் ஆண்டை முன்னிட்டு சுவேந்து அதிகாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “1942ம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 84ம் ஆண்டு நிறைவை நாம் அனுசரிக்கிறோம். அடிமைத்தளையை உடைத்தெறிந்து சுதந்திர விடியலைக் கொண்டு வர, செய் அல்லது செத்து மடி என்ற தீர்மானத்துடன் ஒட்டுமொத்த தேசமும் வலிமையான ஒற்றைக் குரலை எழுப்பியது.

இந்த மகத்தான போராட்டத்தின்போது, வருங்கால சந்ததியினர் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நம் நாட்டின் ஆயிரக்கணக்கான வீர புதல்வர்களும் புதல்விகளும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

ஆகஸ்ட் 9ம் தேதியாகிய இந்த நாளில், அந்த துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன்.

அவர்களின் இணையற்ற வீரமும் மகத்தான தியாகங்களுமே இன்று நாம் போற்றும் சுதந்திர இந்தியாவின் அடித்தளமாக அமைந்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

அவசரநிலையை எதிர்த்து சிறை சென்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் - மே. வங்க முதல்வர் அறிவிப்பு
“எனது மண்டை உடைந்திருக்கும்” - தனது கார் மீதான தாக்குதல் குறித்து மம்தா அதிர்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in