மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் நெருக்கடி: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் நெருக்கடி: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு
Updated on
2 min read

புது டெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க, நாளை (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

உலகளாவிய மற்றும் பிராந்திய அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்காப்புத் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, டிஆர்டிஓ அமைப்பின் தலைவர் சமீர் காமத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் நான்காவது வாரமாக நீடிக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், எரிபொருள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “மேற்கு ஆசி​யா​வின் தற்​போதைய நிலைமை மிகுந்த கவலை​யளிக்​கிறது. 3 வாரங்​களுக்​கும் மேலாக பிரச்சினை நீடிக்​கிறது. இதனால் சர்​வ​தேச பொருளாதாரம் மிகக் கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு உள்ளது. தற்​போதைய போரால் நமது நாட்​டில் பல்​வேறு சவால்​கள் எழுந்​துள்​ளன.

போரின் எதிர்​விளை​வாக உலகின் மிக முக்​கிய கடல்​வழி போக்குவரத்து (ஹார்​முஸ் ஜலசந்​தி) முடங்​கி​யிருக்​கிறது. இதனால் கச்சா எண்​ணெய், எரி​வாயு போக்​கு​வரத்து மோசமாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. வளை​குடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களின் பாது​காப்​பில் மத்​திய அரசு மிகுந்த அக்​கறை கொண்​டிருக்​கிறது. பல்​வேறு நாடு​களின் சரக்கு கப்பல்களில் இந்​தி​யர்​கள் பெரும்​பான்​மை​யாக பணியாற்றி வருகின்றனர்.

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தி​யா​வுக்கு கச்சா எண்ணெய், எரி​வா​யு, உரங்​கள் கொண்​டு​வரும் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்​கி​யிருக்​கிறது.

இப்​போதைய இக்​கட்​டான காலத்​தி​லும் பெட்​ரோல், டீசல், காஸ் விநி​யோகம் சீராக நடை​பெற்று வரு​கிறது. இந்தியாவின் சமையல் காஸ் தேவை​யில் 60 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. உள்​நாட்​டில் சமையல் காஸ் உற்பத்தி அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. நாடு முழு​வதும் பெட்​ரோல், டீசல், சமையல் காஸ், உரம் தட்​டுப்​பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு இருக்​கிறது.

கச்சா எண்​ணெய், எல்​என்​ஜி, எல்​பிஜி ஆகியவை முன்பு 27 நாடு​களில் இருந்து கொள்​முதல் செய்யப்பட்டது. தற்​போது 41 நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்யப்​படு​கிறது. நமது நாட்​டில் 53 லட்​சம் மெட்​ரிக் டன் கச்சா எண்​ணெய் இருப்பு உள்​ளது. இதனை 65 மெட்​ரிக் டன்​னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு​கிறது” என்று பேசியிருந்தார்.

இந்தப் பின்னணியில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ராணுவத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இதற்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளின் பல பகுதிகளில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை தாக்கி வருகிறது. இதனால் கடல் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் போக்குவரத்து சிக்கலை சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது.

மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் நெருக்கடி: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சுமுக உடன்பாடு: பாஜக 27, பாமக 18, அமமுக 11 இடத்தில் போட்டி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in